நீதிமொழிகள் 16:1-33

நீதிமொழிகள் 16:1-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார். மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார். உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு, அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார். யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்; பேரழிவின் நாட்களுக்காக கொடியவர்களையும் வைத்திருக்கிறார். இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்; அவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்பது நிச்சயம். அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும். ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால், அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார். அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட, நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது. மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார். அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது; அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது. நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது; பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது. அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள், ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது. நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி; உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள். அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது, ஆனால் ஞானிகள் அதை சாந்தப்படுத்துவார்கள். அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது; அவருடைய தயவு வசந்தகால மழை மேகம் போன்றது. தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும் வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது! நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது; தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள். அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது; வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது. பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது. அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள், யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்; இனிமையான வார்த்தைகள் மக்களை கற்றுக்கொள்ளத் தூண்டும். விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது, ஆனால் மூடத்தனம் மூடர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறது. ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும், அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும். கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும். மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது, அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும். இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும். வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள், கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள். வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி, தீயவழியில் அவர்களை நடத்துகிறார்கள். கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்; தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள். நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது. பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன். சீட்டு மடியிலே போடப்படும், ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா.

நீதிமொழிகள் 16:1-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும். மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா. ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான். இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும். மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள். உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம். பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.

நீதிமொழிகள் 16:1-33 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர். ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார். நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய். ஒவ்வொரு காரியத்திற்க்கும் கர்த்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. கர்த்தருடைய திட்டத்தில் தீயவர்கள் அழிக்கப்படுகிறார்கள். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களை கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாக கர்த்தர் தண்டிப்பார். உண்மையான அன்பும் நேர்மையும் உன்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தரை மதித்து தீயவற்றிலிருந்து விலகியிரு. ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான். ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது. ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே. ராஜா பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும். எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார். தீமை செய்பவர்களை ராஜாக்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும். ராஜாக்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை ராஜாக்கள் விரும்புகின்றனர். ராஜாவுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக்கொல்லலாம். அறிவுள்ளவர்கள் ராஜாவை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள். ராஜா மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் ராஜா மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும். தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது. நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான். ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும். ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். ஒருவன் அறிவுள்ளவனாக இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாகப் பேசுபவன் நிரூபிக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கமுடியும். அறிவானது ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கையைத் தரும். ஆனால் அறிவற்றவர்களோ மேலும் முட்டாள் ஆவதையே விரும்புவார்கள். அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும். கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது. ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும். உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது. பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும். தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான். தொல்லையை உருவாக்குகிறவன் பல தொல்லைகளுக்குக் காரணமாகிறான். தனது நண்பர்களுக்கு நன்மை தராத வழிகளில் அவர்களை அழைத்துச் செல்கிறான். அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான். நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது. வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது. ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.

நீதிமொழிகள் 16:1-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான். கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது. சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம். விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும். புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே. ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள். பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான். அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான். நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம். பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.