நீதிமொழிகள் 15:3-33
நீதிமொழிகள் 15:3-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன. சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும். மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள். நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும். ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை. யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும். யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார். வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள். பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள். மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும். பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து. அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது. பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது. முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள். சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது. ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான். புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள். ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும். தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது! வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார். கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை. பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள். நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது. யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார். மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது. வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் ஞானிகளோடு குடியிருப்பார்கள். அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, கனத்திற்கு முன்பு தாழ்மை.
நீதிமொழிகள் 15:3-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து. சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
நீதிமொழிகள் 15:3-33 பரிசுத்த பைபிள் (TAERV)
எல்லா இடங்களிலும் என்ன நடைபெறுகிறது என்று கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நல்லவர்கள் தீயவர்கள் அனைவரையும் கர்த்தர் கவனித்துக்கொண்டிருக்கிறார். தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும். முட்டாள்தனமான மனிதன் தன் தந்தையின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிடுவான். ஆனால் அறிவுள்ளவனோ, ஜனங்கள் தனக்குப் போதிக்கவரும்போது கவனித்துக் கேட்கிறான். நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன. அறிவுள்ளவர்கள் பேசும் பேச்சு உனக்குப் புதிய தகவல்களைத் தருபவையாக இருக்கும். அறிவில்லாதவர்கள் பேசுவதோ கேட்கப் பயனில்லாததாக இருக்கும். தீயவர்கள் கொடுக்கிற பலிகளை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார். தீயவர்களின் வாழ்க்கை முறையை கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களை கர்த்தர் நேசிக்கிறார். ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான். கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார். அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான். ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும். அறிவுள்ளவன் மேலும் அறிவைப் பெற விரும்புகிறான். அறிவில்லாதவனோ மேலும் முட்டாள் ஆவதை விரும்புகிறான். சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும். ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும். வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது. எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக்குரியவர்கள். எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும். அறிவுள்ள குமாரன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான். முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான். ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான். நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது. வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான். வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார். கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார். ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக்கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை. நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும். தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார். ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக்கொள்ளச் செய்கின்றன. நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான். ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான். கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.
நீதிமொழிகள் 15:3-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு. ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல. துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கருடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ? பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து. சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான். மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான். ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும். ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.