நீதிமொழிகள் 14:1-35
நீதிமொழிகள் 14:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும். மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய். தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான். துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள். நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு. பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும். ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு. நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான். துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும். நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி. ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
நீதிமொழிகள் 14:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள். நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள், அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள். மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி; ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும். எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு. மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள், ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள். ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது. மூடரின் வழியைவிட்டு விலகியிரு, ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய். தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது. ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது. கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும். மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம். பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள். அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள். ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள். முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான். அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது. தீயவர்கள் நல்லவர்கள் முன்னும், கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள். ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்; ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு. தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்; ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா? ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள். கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும். ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது. மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம். யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை, ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான். பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது. ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள். பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள். பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை. நீதி ஒரு நாட்டையே உயர்த்தும், ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம். ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான், ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான்.
நீதிமொழிகள் 14:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள். சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு. நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி. தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.
நீதிமொழிகள் 14:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)
ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள். சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான். அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும். வேலை செய்வதற்கு எருதுகள் இல்லாவிட்டால் களஞ்சியங்கள் வெறுமையாக இருக்கும். எருதுகளின் பலத்தைப் பயன்படுத்தி ஜனங்கள் அதிக விளைச்சலைப் பெறமுடியும். உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன். தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும். முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை. புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப்பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள். ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும். ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும். ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது. தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள். முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான். அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான். விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான். அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள். நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள். உனது பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றி கெட்டவற்றை நினையாதே. நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், ஏழை ஜனங்களிடம் இரக்கமாக இரு. தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர். நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய். அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான். கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள். கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும். ஒரு ராஜா ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான். பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான். மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது. ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக்கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான். தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான். அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப்பற்றிக்கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள். நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும். அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் ராஜா மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் ராஜா கோபப்படுவான்.