நீதிமொழிகள் 13:12-19

நீதிமொழிகள் 13:12-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்; ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும். அறிவுரையை ஏளனம் செய்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்; ஆனால் கட்டளைகளை மதிக்கிறவர்களோ பலனைப் பெறுவார்கள். ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. நல்லறிவுள்ளவர்கள் தயவைப் பெறுவார்கள், ஆனால் உண்மையற்றவர்களின் வழி கேடு விளைவிக்கும். விவேகிகள் அறிவுடன் நடந்துகொள்கிறார்கள்; ஆனால் மூடர்களோ தங்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான், ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான். அறிவுரையை அலட்சியம் செய்பவர்கள் வறுமையையும் வெட்கத்தையும் அடைகிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்கிறவர்கள் புகழப்படுவார்கள். வாஞ்சை நிறைவேறுவது உள்ளத்திற்கு இனிது, ஆனால் தீமையைவிட்டு விலகுவதையோ மூடர் வெறுக்கிறார்கள்.

நீதிமொழிகள் 13:12-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.

நீதிமொழிகள் 13:12-19 பரிசுத்த பைபிள் (TAERV)

நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய். மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும்போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான். ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும். புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது. ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள். ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும். ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும்போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான். ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.

நீதிமொழிகள் 13:12-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம். புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.