நீதிமொழிகள் 13:1-25

நீதிமொழிகள் 13:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான். நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு. மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான். நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோகும். அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான். நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம். புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான். பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான். நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

நீதிமொழிகள் 13:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஞானமுள்ள மகன் தன் தகப்பனின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறான்; ஆனால் ஏளனக்காரர்களோ கண்டிப்புக்கு செவிகொடுப்பதில்லை. மனிதர் தன் வாயின் வார்த்தையினால் நன்மைகளை அனுபவிக்கிறார்கள், ஆனால் உண்மையற்றவர்கள் வன்முறைகளையே விரும்புகிறார்கள். தங்கள் நாவைக் காத்துக்கொள்பவர்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள், ஆனால் முன்யோசனையின்றி பேசுபவர்கள் அழிவுக்குள்ளாகிறார்கள். சோம்பேறிகள் ஆசைப்பட்டும் ஒன்றும் பெறாமலிருக்கிறார்கள்; ஆனால் சுறுசுறுப்புள்ளவர்களின் ஆசைகளோ முற்றிலும் நிறைவேறுகின்றன. நீதிமான்கள் பொய்யானவற்றை வெறுக்கிறார்கள், ஆனால் கொடியவர்கள் வெட்கத்தையும் அவமானத்தையும் கொண்டுவருகிறார்கள். உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்; ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும். சிலர் ஒன்றுமில்லாமல் பணக்காரர்களைப் போல பாசாங்கு செய்வார்கள்; வேறுசிலர் அதிக செல்வமிருந்தும் ஏழையைப்போல் பாசாங்கு செய்வார்கள். பயமுறுத்தப்படும்போது பணக்காரர் தம் செல்வத்தைத் தந்து அவருடைய வாழ்வை மீட்கலாம், ஆனால் ஏழையோ பயமுறுத்தல் எதையுமே கேள்விப்படுவதில்லை. நீதிமான்களின் வெளிச்சம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது, ஆனால் கொடியவர்களின் விளக்கோ அணைக்கப்படும். அகந்தை வாக்குவாதங்களை பிறப்பிக்கிறது, ஆனால் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவர்களிடத்தில் ஞானம் காணப்படும். தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும், ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்; ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும். அறிவுரையை ஏளனம் செய்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்; ஆனால் கட்டளைகளை மதிக்கிறவர்களோ பலனைப் பெறுவார்கள். ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. நல்லறிவுள்ளவர்கள் தயவைப் பெறுவார்கள், ஆனால் உண்மையற்றவர்களின் வழி கேடு விளைவிக்கும். விவேகிகள் அறிவுடன் நடந்துகொள்கிறார்கள்; ஆனால் மூடர்களோ தங்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான், ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான். அறிவுரையை அலட்சியம் செய்பவர்கள் வறுமையையும் வெட்கத்தையும் அடைகிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்கிறவர்கள் புகழப்படுவார்கள். வாஞ்சை நிறைவேறுவது உள்ளத்திற்கு இனிது, ஆனால் தீமையைவிட்டு விலகுவதையோ மூடர் வெறுக்கிறார்கள். ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்; ஆனால் மூடர்களுக்குத் தோழர்கள் தீங்கு அனுபவிப்பார்கள். பேரழிவு பாவிகளைப் பின்தொடர்கிறது, ஆனால் நன்மை நீதிமான்களின் வெகுமதி. ஒரு நல்ல மனிதர் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பரம்பரை சொத்துக்களை விட்டுச்செல்கிறார்; ஆனால் பாவிகளின் செல்வமோ, நீதிமான்களுக்காக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம், ஆனால் அநீதி அதை அழித்திடும். பிரம்பைக் கையாளாதவர்கள் தன் பிள்ளைகளை வெறுக்கிறார்கள்; ஆனால் தன் பிள்ளைகள்மீது அன்பாயிருக்கிறவர்களோ அவர்களை நற்கட்டுப்பாட்டில் நடத்துவார்கள். நீதிமான்கள் தங்கள் உள்ளம் திருப்தியாகுமட்டும் சாப்பிடுவார்கள்; ஆனால் கொடியவர்களின் வயிறோ பசியாயிருக்கும்.

நீதிமொழிகள் 13:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.

நீதிமொழிகள் 13:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு ஞானமுள்ள குமாரன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை. நல்லவர்கள், தாம் சொல்லுகிற நல்லவற்றுக்காகத் தகுந்த வெகுமதிகளை அடைகிறார்கள். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் தவறானவற்றைச் செய்ய விரும்புகின்றனர். ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும். சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள். நல்லவர்கள் பொய்யை வெறுக்கிறார்கள். தீயவர்களோ அவமானமடைவார்கள். நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும். சிலர் செல்வந்தர்களைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதுவுமில்லை. மற்றும் சிலரோ ஏழையைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் செல்வந்தர்களாக இருப்பார்கள். செல்வமுள்ளவன் சில சமயங்களில் தன் உயிரைக் காப்பாற்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் ஏழைக்கு இதுபோன்ற மிரட்டல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும். ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப்போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன். மற்றவர்களைவிட தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்கள் துன்பத்தையே உருவாக்குகிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பவர்கள் ஞானம் உடையவர்கள். ஒருவன் பணம் பெறுவதற்காக மற்றவனை ஏமாற்றலாம். பிறகு அப்பணமும் அவனை விட்டு உடனடியாகப் போய்விடும். ஆனால் கடினமாக சம்பாதிக்கிறவனின் பணமானது மென்மேலும் வளர்ந்து பெருகும். நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய். மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும்போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான். ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும். புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது. ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள். ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும். ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும்போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான். ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள். ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும். பாவிகள் எங்கே போனாலும் துன்பங்கள் அவர்களைத் துரத்தும். ஆனால் நல்லவர்களுக்கு நல்லவையே நடக்கும். நல்லவர்களுக்குத் தம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்கிற அளவிற்குச் செல்வம் இருக்கும். தீயவர்களிடம் உள்ள அனைத்தையும் முடிவில் நல்லவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான். ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் குமாரனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும். நல்லவர்கள், தமக்கு எது தேவையோ அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தீயவர்களோ, முக்கியமானவற்றைப் பெறாமலேயே இருப்பார்கள்.