நீதிமொழிகள் 11:17-31

நீதிமொழிகள் 11:17-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள். கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்; ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள். உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்; ஆனால் தீமையைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைக் காண்பார்கள். யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்; ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார். இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள், ஆனால் நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள். புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது. நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும், ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்; இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார். தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்; மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்; ஆனால் அவற்றை விற்க மனதுடையவர்களை மக்கள் ஆசீர்வதிப்பார்கள். நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்; தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும். தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள். தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்; மூடர்களோ ஞானிக்கு வேலைக்காரர்களாய் இருப்பார்கள். நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள். நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால், இறை பக்தியற்றவர்களும் பாவிகளும் தங்களுக்குரிய தண்டனையைப் பெறுவது எவ்வளவு நிச்சயம்!

நீதிமொழிகள் 11:17-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

நீதிமொழிகள் 11:17-31 பரிசுத்த பைபிள் (TAERV)

இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான். உண்மையில் நன்மையானது வாழ்வைக்கொண்டுவரும். ஆனால் தீயவர்களோ தீமையைப் பின்தொடர்ந்து மரணத்தை அடைகின்றனர். தீமை செய்ய விரும்புகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நன்மை செய்ய முயல்பவர்களில் மகிழ்ச்சி அடைகிறார். தீயவர்கள் தண்டனை பெறுவது உண்மை. நல்லவர்களோ விடுவிக்கப்படுகிறார்கள். அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். நல்லவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் மிகுந்த நன்மை விளையும். தீயவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் தொல்லைகளே விளையும். ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் மேலும், மேலும் பெறுவான். ஆனால் ஒருவன் கொடுக்க மறுத்தால் பிறகு அவன் ஏழ்மையாவான். ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய். தானியங்களைக் கட்டிவைத்து விற்க மறுப்பவர்கள்மீது ஜனங்கள் கோபம் அடைகிறார்கள். ஆனால் தானியங்களை மற்றவர்களுக்கு விற்பவர்கள்மேல் ஜனங்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நன்மை செய்ய முயலுகிற ஒருவனை ஜனங்கள் மதிக்கின்றனர். ஆனால் தீமை செய்கிறவனோ துன்பத்தைத் தவிர வேறு எதையும் பெறுவதில்லை. தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான். ஒருவன் தன் குடும்பத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்தால், அவன் எதையும் பெறமாட்டான். அதோடு அறிவில்லாதவன் முடிவில் ஞானமுள்ளவனுக்குச் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுவான். நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வு தரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக்கொடுக்கிறான். பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.

நீதிமொழிகள் 11:17-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம். நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள். தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.