நீதிமொழிகள் 11:1-31
நீதிமொழிகள் 11:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம். அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும். உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்; ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது. நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும். குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்; ஆனால் கொடியவர்களை அவர்களுடைய கொடுமையே அழிக்கும். நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்; ஆனால் துரோகிகளோ தங்கள் தீய ஆசைகளில் அகப்படுவார்கள். கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்; அவர்கள் தங்கள் பலத்தினால் எதிர்பார்த்த யாவும் ஒன்றுமில்லாமல் போகும். நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்; கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள். இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்; ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள். நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்; கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும். நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்; ஆனால் கொடியவர்களின் வார்த்தையினாலோ அது அழிந்துபோகும். மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் தங்கள் நாவை அடக்குகிறார்கள். புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்; ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள். ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது, ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும். இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்; ஆனால் உறுதியளிப்பதில் கைகளை உதறித் தள்ளுகிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்; ஆனால் உழைக்கும் மனிதர்களோ செல்வத்தை மட்டுமே சேர்ப்பார்கள். இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள். கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்; ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள். உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்; ஆனால் தீமையைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைக் காண்பார்கள். யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்; ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார். இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள், ஆனால் நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள். புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது. நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும், ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்; இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார். தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்; மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்; ஆனால் அவற்றை விற்க மனதுடையவர்களை மக்கள் ஆசீர்வதிப்பார்கள். நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்; தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும். தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள். தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்; மூடர்களோ ஞானிக்கு வேலைக்காரர்களாய் இருப்பார்கள். நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள். நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால், இறை பக்தியற்றவர்களும் பாவிகளும் தங்களுக்குரிய தண்டனையைப் பெறுவது எவ்வளவு நிச்சயம்!
நீதிமொழிகள் 11:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
நீதிமொழிகள் 11:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)
பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே. வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள். நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும். நல்லவன் உத்தமனாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை எளிதானதாக இருக்கும். ஆனால் தீயவனோ தான் செய்கிற கெட்ட செயல்களால் அழிக்கப்படுகிறான். நன்மை உத்தமனைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீயவர்களோ தாம் விரும்புகிற கெட்ட செயல்களால் சிக்கிக்கொள்கின்றனர். தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும். துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும். தீயவன், தன் சொற்களால் பிறரைப் புண்படுத்துவான். ஆனால் நல்லவர்களோ தங்களுடைய ஞானத்தால் காப்பாற்றப்படுவார்கள். நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள். உத்தமமானவர்கள் இருந்து ஆசீர்வதிப்பதால் நகரம் சிறப்புடையதாகிறது. தீயவர்களின் பேச்சால் நகரம் அழிந்துபோகிறது. ஒருவன் நல்லுணர்வு இல்லாதவனாக இருந்தால் பக்கத்தில் உள்ளவர்களைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான். ஆனால் ஞானம் உள்ளவனோ எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான். அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான். பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். நீ அடுத்தவனது கடனைத் தீர்ப்பதாக வாக்களித்திருந்தால் அதனால் வருத்தப்படுவாய். நீ இத்தகைய செயல்களை மறுத்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பாய். கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள். இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான். உண்மையில் நன்மையானது வாழ்வைக்கொண்டுவரும். ஆனால் தீயவர்களோ தீமையைப் பின்தொடர்ந்து மரணத்தை அடைகின்றனர். தீமை செய்ய விரும்புகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நன்மை செய்ய முயல்பவர்களில் மகிழ்ச்சி அடைகிறார். தீயவர்கள் தண்டனை பெறுவது உண்மை. நல்லவர்களோ விடுவிக்கப்படுகிறார்கள். அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். நல்லவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் மிகுந்த நன்மை விளையும். தீயவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் தொல்லைகளே விளையும். ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் மேலும், மேலும் பெறுவான். ஆனால் ஒருவன் கொடுக்க மறுத்தால் பிறகு அவன் ஏழ்மையாவான். ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய். தானியங்களைக் கட்டிவைத்து விற்க மறுப்பவர்கள்மீது ஜனங்கள் கோபம் அடைகிறார்கள். ஆனால் தானியங்களை மற்றவர்களுக்கு விற்பவர்கள்மேல் ஜனங்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நன்மை செய்ய முயலுகிற ஒருவனை ஜனங்கள் மதிக்கின்றனர். ஆனால் தீமை செய்கிறவனோ துன்பத்தைத் தவிர வேறு எதையும் பெறுவதில்லை. தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான். ஒருவன் தன் குடும்பத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்தால், அவன் எதையும் பெறமாட்டான். அதோடு அறிவில்லாதவன் முடிவில் ஞானமுள்ளவனுக்குச் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுவான். நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வு தரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக்கொடுக்கிறான். பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.
நீதிமொழிகள் 11:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போகும். நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும். மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான். நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம். நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள். தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.