நீதிமொழிகள் 1:1-7

நீதிமொழிகள் 1:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம். இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது. இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன. ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும். இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.

நீதிமொழிகள் 1:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

நீதிமொழிகள் 1:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை தாவீதின் குமாரனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும். இந்த ஞானவார்த்தைகள் ஜனங்களுக்குத் தங்களுடைய மனம் நேர்மையான வழியில் செல்ல போதிக்கும். ஜனங்கள் நேர்மையோடும், நியாயத்தோடும் நல்லவர்களாகவும் தங்கள் புத்தியைச் சரியான வழியில் செலுத்த இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். ஞானத்தை அடைய விரும்பும் ஜனங்களுக்கு இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். இந்த ஞானவார்த்தைகள் இளந்தலைமுறையினருக்கு அவர்கள் அறிய வேண்டியவற்றையும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் போதிக்கும். அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம். பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள்.

நீதிமொழிகள் 1:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.