நீதிமொழிகள் 1:1-19

நீதிமொழிகள் 1:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம். இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது. இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன. ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும். இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள். என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே. அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும். என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், அவர்களுடன் இழுப்புண்டு போகாதே. அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம், அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்; எங்களுடன் பங்காளியாயிரு; நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால், என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே. ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன. பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா. ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே, தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும்.

நீதிமொழிகள் 1:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் நீ சம்மதிக்காதே. எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, குற்றமில்லாமல் இருக்கிறவர்களை காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடு பங்காளியாக இரு; நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தம் சிந்த விரைகிறது. எவ்வகையான பறவையானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.

நீதிமொழிகள் 1:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை தாவீதின் குமாரனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும். இந்த ஞானவார்த்தைகள் ஜனங்களுக்குத் தங்களுடைய மனம் நேர்மையான வழியில் செல்ல போதிக்கும். ஜனங்கள் நேர்மையோடும், நியாயத்தோடும் நல்லவர்களாகவும் தங்கள் புத்தியைச் சரியான வழியில் செலுத்த இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். ஞானத்தை அடைய விரும்பும் ஜனங்களுக்கு இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். இந்த ஞானவார்த்தைகள் இளந்தலைமுறையினருக்கு அவர்கள் அறிய வேண்டியவற்றையும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் போதிக்கும். அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம். பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம். உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும். என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது. அந்தப் பாவிகள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் ஒளித்திருப்போம். ஒன்றும் அறியாதவர்களைக்கொல்லும்படிக் காத்திருப்போம். நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம். நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம். எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக்கொள்வோம்” என்பார்கள். என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே. அந்தத் தீயவர்கள் எப்பொழுதும் தீமை செய்யவே தயாராக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்கள் ஜனங்களைக்கொல்வதையே விரும்புவார்கள். ஜனங்கள் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிக்கிறார்கள். ஆனால் பறவைகள் கவனித்துக்கொண்டிருக்கும்போது அதனைப் பிடிக்க வலையை விரிப்பது வீண். அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக்கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள். பேராசை உடையவர்கள் எப்பொழுதும் அதனாலேயே அழிந்துபோவார்கள்.

நீதிமொழிகள் 1:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள். என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்; என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.