பிலிப்பியர் 4:4-9

பிலிப்பியர் 4:4-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்! உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். கர்த்தர் விரைவில் வருகிறார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை, மன்றாட்டினாலும், வேண்டுதலினாலும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள். அப்பொழுது, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சமாதானமும், அமைதியும் உங்கள் இருதயங்களையும், மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் காத்துக்கொள்ளும். இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானது எவையோ, மதிப்பானது எவையோ, சரியானது எவையோ, தூய்மையானது எவையோ, அன்பானது எவையோ, அத்துடன் பாராட்டுதலுக்குத் தகுந்தது எவையோ, மேன்மையும் புகழ்ச்சியுமானது எவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார்.

பிலிப்பியர் 4:4-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன். உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார். நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும். கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.

பிலிப்பியர் 4:4-9 பரிசுத்த பைபிள் (TAERV)

எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள். நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது. இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள். என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார்.

பிலிப்பியர் 4:4-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.

பிலிப்பியர் 4:4-9

பிலிப்பியர் 4:4-9 TAOVBSIபிலிப்பியர் 4:4-9 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்