எண்ணாகமம் 5:11-31

எண்ணாகமம் 5:11-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி, ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக. ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்தில் போட்டு, ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும். பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து: ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய். உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்து தீட்டுப்பட்டிருப்பாயானால். கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக. சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள். பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு, சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும். பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி, ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக்குடிக்கும்படி கொடுக்கக்கடவன். அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள். அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள். ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும், புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன். புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 5:11-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஒரு மனிதனுடைய மனைவி முறைதவறி அவனுக்கு உண்மையற்றவளாகி, இன்னொருவனுடன் உறவுகொள்ளக்கூடும். இது அவளுடைய கணவனுக்குத் தெரியாமலும், அவளுக்கு விரோதமான சாட்சி இல்லாமலும், அதில் அவள் கையும் மெய்யுமாய் பிடிபடாமலும், அவளுடைய கெட்டநடத்தை கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். அப்படியிருக்கும்போது அவளுடைய கணவன் தனது மனைவியின் கெட்ட நடத்தையைப்பற்றிச் சந்தேகங்கொண்டு எரிச்சல் அடையலாம். அல்லது அவள் கெட்டநடத்தை அற்றவளாய் இருக்கும்போதும் அவன் எரிச்சலடைந்து சந்தேகங்கொள்ளக்கூடும். அவ்வாறு நடந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அத்துடன் அவன் பத்தில் ஒரு பங்கு எப்பா அளவான வாற்கோதுமை மாவை அவளுக்கான காணிக்கையாகக் கொண்டுபோக வேண்டும். அதன்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது. ஏனெனில், அது எரிச்சலுக்கான தானிய காணிக்கை. அது ஒருவனின் குற்றத்தை எடுத்துக்காட்டும் நினைவூட்டும் காணிக்கை. “ ‘ஆசாரியன் அவளை யெகோவாவுக்குமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். பின்பு அவன், பரிசுத்த தண்ணீரை ஒரு மண் பாத்திரத்தினுள் ஊற்றி, இறைசமுகக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் புழுதியை எடுத்து அதற்குள் போடவேண்டும். ஆசாரியன் அப்பெண்ணை யெகோவா முன்பாக நிறுத்திய பின், அவளுடைய தலைமயிரை விரித்துவிடவேண்டும். சாபத்தைக் கொண்டுவரும் கசப்புத் தண்ணீரை ஆசாரியன் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கையில், எரிச்சலுக்கான தானிய காணிக்கையான நினைவூட்டும் காணிக்கையை அவளுடைய கைகளில் வைக்கவேண்டும். பின் ஆசாரியன் அவளைச் சத்தியம் செய்யப்பண்ணி, அவளிடம் சொல்லவேண்டியதாவது: “நீ உன் கணவனுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டிருக்கையில், வேறு ஒரு மனிதனுடன் உறவுகொள்ளாமலும், முறைதவறி நடந்து உன்னைக் கறைப்படுத்தாமலும் இருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் இக்கசப்பு தண்ணீர் உனக்குத் தீங்கு செய்யாதிருப்பதாக. ஆனால் நீ உன் கணவனுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கீனமாக நடந்து வேறு ஒரு மனிதனுடன் உறவுகொண்டு உன்னை அசுத்தப்படுத்தியிருந்தால்” யெகோவா உன் தொடையை அழுகப்பண்ணி, உன் வயிற்றை வீங்கப்பண்ணுகிறபோது, உன் மக்கள் உன்னைச் சபித்து, பகிரங்கமாக உன்னை நிந்திக்கும்படி செய்வாராக’ என்ற இந்த சாபத்தின் சத்தியத்திற்கு ஆசாரியன் அவளை உட்படுத்தவேண்டும். இந்த சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் உடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்கவும், உன் தொடையை அழுகவும் செய்வதாக என்றும் சொல்லவேண்டும்.” “ ‘அப்பொழுது அப்பெண், “ஆமென், அப்படியே ஆகட்டும்” என்று சொல்லவேண்டும். “ ‘பின்பு ஆசாரியன் இந்த சாபங்களை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அவற்றை அந்தக் கசப்புத் தண்ணீருக்குள் கழுவிவிடவேண்டும். அதன்பின் சாபத்தைக் கொண்டுவரும் அக்கசப்புத் தண்ணீரை அவள் குடிக்கும்படி செய்யவேண்டும். அத்தண்ணீர் அவளின் உடலுக்குள் போய் கசப்பான வேதனையை உண்டுபண்ணும். ஆசாரியன் அப்பெண்ணின் கையில் இருந்து எரிச்சலுக்கான தானிய காணிக்கையை வாங்கி, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டி, அதைப் பலிபீடத்திற்குக் கொண்டுவர வேண்டும். அத்தானிய காணிக்கையில் ஆசாரியன் ஒரு கைப்பிடி எடுத்து, ஞாபகார்த்தக் காணிக்கையாக பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன்பின் அப்பெண் அத்தண்ணீரைக் குடிக்கும்படிச் செய்யவேண்டும். அவள் தன்னை அசுத்தப்படுத்தி, தன் கணவனுக்கு உண்மையற்றவளாய் இருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்போது, அது அவளுக்குள்போய், கசப்பான வேதனையைக் கொண்டுவரும். அப்பொழுது அவள் வயிறு வீங்கி, அவளுடைய தொடையும் அழுகிப்போகும். அவளும் தன் மக்கள் மத்தியில் சபிக்கப்பட்டவளாவாள். ஆனாலும், அவள் கறைப்படாமல் கெட்டநடத்தை அற்றவளாக சுத்தமாக இருந்தால், அவள் அக்குற்றங்களுக்கு நீங்கலாகிப் பிள்ளைகளைப் பெறுவாள். “ ‘ஒரு பெண் தன் கணவனுடன் திருமணத்தில் இணைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கீனமாக நடந்து தன்னைக் கறைப்படுத்தினால், எரிச்சலுக்கான சட்டம் இதுவே. அல்லது ஒருவன் தன் மனைவியின்மேல் சந்தேகப்படுவதால், அவனுக்கு எரிச்சல் உணர்வு வரும்போது, அதற்கான சட்டமும் இதுவே. அவன் அவளை யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, ஆசாரியன் இந்த முழு சட்டத்தின்படியும் அவளுக்குச் செய்யவேண்டும். கணவனோ எந்தக் குற்றத்திற்கும் நீங்கலாயிருப்பான். தன் பாவத்தினால் வந்த விளைவுகளை அப்பெண்ணே அனுபவிக்கவேண்டும்’ ” என்றார்.

எண்ணாகமம் 5:11-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, கணவனுக்குத் துரோகம்செய்து, ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும், அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும். “ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் ஊற்றி, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு, பெண்ணைக் யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, அவளுடைய முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவளுடைய உள்ளங்கையிலே வைக்கவேண்டும்; சாபகாரணமான கசப்பான தண்ணீர் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும். பின்பு ஆசாரியன் அவளை ஆணையிட வைத்து: ஒருவனும் உன்னோடு உறவுகொள்ளாமலும், உன்னுடைய கணவனுக்கு கீழ்பட்டிருக்கிற நீ தீட்டுப்படும்படி பிறர்முகம் பார்க்காமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான தண்ணீரின் தோஷத்திற்கு நீங்கலாக இருப்பாய். உன்னுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன்னுடைய கணவனைத்தவிர அந்நியனோடு உறவுகொண்டு தீட்டுப்பட்டிருப்பாயானால், யெகோவா உன்னுடைய இடுப்பு சூம்பவும், உன்னுடைய வயிறு வீங்கவும்செய்து, உன்னை உன்னுடைய மக்களுக்குள்ளே சாபமும் ஆணையிடும் அடையாளமாகவும் வைப்பாராக. சாபகாரணமான இந்த தண்ணீர் உன்னுடைய வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் செய்யும்படி, உன்னுடைய குடலுக்குள் போகவேண்டும் என்கிற சாபவார்த்தையாலே பெண்ணை ஆணையிடவைத்துச் சொல்வானாக. அதற்கு அந்தப் பெண்: ஆமென், ஆமென், என்று சொல்லவேண்டும். “பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான தண்ணீரால் கழுவிப்போட்டு, சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும். பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி, ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு பெண்ணுக்கு அந்த தண்ணீரைக்குடிக்கும்படி கொடுக்கவேண்டும். அந்த தண்ணீரைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன்னுடைய கணவனுக்குத் துரோகம்செய்திருந்தால், சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் நுழைந்து கசப்புண்டானதால், அவளுடைய வயிறு வீங்கி, அவளுடைய இடுப்பு சூம்பும்; இப்படியே அந்தப் பெண் தன்னுடைய மக்களுக்குள்ளே சாபமாக இருப்பாள். அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பமடையக்கூடியவளாக இருப்பாள். “ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும், கணவன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் யெகோவாவுடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும். கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 5:11-31 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடம், “ஒருவனின் மனைவி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம். அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம். ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம். இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும். “ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி, பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும். ஆசாரியன் அவளை கர்த்தர் முன் நிற்குமாறு செய்து பிறகு அவளது கூந்தலை அவிழ்க்கச் சொல்லி, அவள் கையில் தானியக் காணிக்கையை வைக்க வேண்டும். இப்பலி, அவளது கணவனால் அவனது சந்தேகத்திற்காக கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகும். அதே நேரத்தில் ஆசாரியன் தன் கையில் பரிசுத்த தண்ணீர் இருக்கும் மண் ஜாடியை வைத்திருக்க வேண்டும். அந்த பரிசுத்த தண்ணீர் அவள் பாவம் செய்திருந்தால் அவளுக்கு சாபத்தை உண்டாக்கும். “பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது. ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல. இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும். “பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும். நீ கேடு உண்டாக்கக் கூடிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீ பாவம் செய்திருந்தால், ‘உனக்குக் குழந்தை ஏற்படாமல் போகும். நீ கருவுற்றிருந்தால் அது பிறக்குமுன் மரித்துப்போகும்’ என்று ஆசாரியன் அப்பெண்ணிடம் கூறவேண்டும். அதற்கு அவள், ‘நீர் சொல்கிறபடி நான் செய்வேன்’ என்று கூற வேண்டும். “இந்த எச்சரிக்கைகளையெல்லாம் ஒரு நீண்டத் தோல் சுருளில் ஆசாரியன் எழுதி வைக்க வேண்டும். அதனைப் பிறகு பரிசுத்தத் தண்ணீரால் சிறிது கழுவ வேண்டும். பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும். “பிறகு ஆசாரியன் அவள் கையில் உள்ள தானியக் காணிக்கையை வாங்கி அதனை கர்த்தரின் சமூகத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும். பின் அதனைப் பலிபீடத்தில் வைக்க வேண்டும். ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்தவளாக இருந்தால், அந்த தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கும். அத்தண்ணீர் அவள் உடம்புக்குள் சென்று அவளுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அவள் கருவிலுள்ள எந்தக் குழந்தையும், அது பிறக்கு முன்னரே மரித்துப்போகும். அவள் என்றென்றும் குழந்தை பெற முடியாமல் இருப்பாள். அவள் அவளது ஜனங்களின் மத்தியில் சபிக்கப்பட்டவளாக இருப்பாள். ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள். “இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும். ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம். அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.