எண்ணாகமம் 4:21-49

எண்ணாகமம் 4:21-49 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “கெர்சோனியரை, அவர்கள் குடும்பங்களின்படியும், வம்சங்களின்படியும் கணக்கிடு. சபைக் கூடாரத்தின் வேலைகளைச் செய்யவரும் முப்பது வயதுதொடங்கி ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களையும் கணக்கிடு. “கெர்சோனிய வம்சங்கள் வேலைசெய்யும்போதும், சுமை சுமக்கும்போதும் அவர்களுக்குரிய பணி என்னவென்றால்: சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் திரைகள், கூடாரம், அதன் மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட அதன் வெளிப்புற மூடுதிரை, சபைக்கூடார நுழைவாசலுக்கான திரைகள் ஆகியவற்றை அவர்கள் சுமக்கவேண்டும். அத்துடன், இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியுள்ள முற்றத்தின் திரைகள், முற்றத்தின் வாசல் திரை, அதன் கயிறுகள் மற்றும் அதன் பணியில் பயன்படுத்தும் உபகரணங்கள் எல்லாவற்றையும் அவர்கள் சுமக்கவேண்டும். அவை தொடர்பாகச் செய்யப்படவேண்டிய எல்லாவற்றையும் கெர்சோனியரே செய்யவேண்டும். தூக்குவதானாலும், வேறு எந்த வேலைசெய்வதானாலும் அவர்களுடைய எல்லா பணிகளும் ஆரோனுடைய அவன் மகன்களுடைய வழிகாட்டலிலேயே செய்யப்படவேண்டும். அவர்கள் சுமக்கவேண்டிய அவர்களுடைய பொறுப்பை நீ அவர்களுக்கு நியமிக்கவேண்டும். சபைக் கூடாரத்தில் கெர்சோனிய வம்சங்களின் பணி இதுவே. அவர்களுடைய கடமைகள் ஆசாரியனான ஆரோனின் மகன் இத்தாமாரின் வழிநடத்துதலிலேயே செய்யப்படவேண்டும். “மெராரியரை அவர்களின் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடு. சபைக்கூடார வேலைகளைச் செய்யவரும் முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களையும் கணக்கிடு. சபைக் கூடாரத்தில் பணிசெய்யும்போது, அவர்களுடைய கடமை என்னவென்றால், இறைசமுகக் கூடாரத்தின் சட்டப்பலகைகள், அதன் குறுக்குச் சட்டங்கள், அதன் கம்பங்கள், அடித்தளங்கள், சுற்றியுள்ள முற்றத்தின் கம்பங்கள், அடித்தளங்கள், கூடார முளைகள், கயிறுகள், அவற்றின் உபயோகத்திற்கான முழு உபகரணங்கள் ஆகியவற்றைச் சுமப்பதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சுமக்கவேண்டியதை நியமிக்கவேண்டும். ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் வழிகாட்டலில், மெராரி வம்சத்தார் சபைக் கூடாரத்தின் வேலையைச் செய்கையில், அவர்களுடைய பணி இதுவே” என்றார். மோசேயும், ஆரோனும், சமுதாயத்தின் தலைவர்களும் கோகாத்தியரை அவர்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிட்டார்கள். சபைக் கூடாரத்தில் பணிசெய்ய வந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள ஆண்களையெல்லாம் வம்சம் வம்சமாகக் கணக்கிட்டபோது, அவர்கள் 2,750 பேராய் இருந்தார்கள். சபைக் கூடாரத்தில் பணிசெய்த கோகாத்திய வம்சங்கள் எல்லோருடைய மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டிருந்தபடியே, மோசேயும் ஆரோனும் அவர்களை எண்ணினார்கள். கெர்சோனியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள். சபைக்கூடார வேலைகளைச் செய்யவந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களும் அவர்கள் வம்சங்களின்படியும் குடும்பங்களின்படியும் எண்ணப்பட்டபோது, 2,630 பேராய் இருந்தார்கள். சபைக் கூடாரத்தில் பணிசெய்த கெர்சோன் வம்சத்தைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. மோசேயும் ஆரோனும் யெகோவாவின் கட்டளைப்படியே, அவர்களை எண்ணினார்கள். மெராரியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள். சபைக்கூடார வேலைகளைச் செய்யவந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களும், அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணப்பட்டபோது, அவர்கள் 3,200 பேராய் இருந்தார்கள். மெராரிய வம்சங்களைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும் அவர்களைக் கணக்கிட்டார்கள். இப்படியாக மோசேயும் ஆரோனும், இஸ்ரயேல் தலைவர்களும் லேவியர்கள் எல்லோரையும் அவர்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிட்டார்கள். பணிசெய்யும்படி சபைக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்யவந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களும் எண்ணப்பட்டபோது, அவர்கள் 8,580 பேராய் இருந்தார்கள். மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய வேலையும், அவனவன் எதைச் சுமப்பது என்பதும் நியமிக்கப்பட்டது.

எண்ணாகமம் 4:21-49 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும், யெகோவா மோசேயை நோக்கி: “கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க, முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக. பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது: அவர்கள் வாசஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் உரிய தொங்கு திரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற மெல்லிய தோல் மூடியையும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவையும், பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்கு திரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்குரிய கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள். கெர்சோன் சந்ததியார்கள் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவனுடைய மகன்களும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய எல்லா சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடம் ஒப்புவியுங்கள். கெர்சோன் சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் மகன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும். “மெராரி சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க, முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணவேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் எல்லா கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணவேண்டும். ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க, முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணினார்கள். அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் 2,750 பேர். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே. கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க, முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லோரும் எண்ணப்பட்டார்கள். அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர். மோசேயினாலும் ஆரோனாலும் யெகோவா கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே. மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க, முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லோரும் எண்ணப்பட்டார்கள். அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே 3,200 பேர். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே. லேவியர்களுடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும், மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லோரும், 8,580 பேராக இருந்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இந்த விதமாக, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.

எண்ணாகமம் 4:21-49 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடம், “கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்து ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு. படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு. “இவைதான் கெர்சோன் வம்சத்தாரின் வேலைகள். அவர்கள் கீழ்க்கண்டவற்றைச் சுமக்க வேண்டும்: பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலிபீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப் பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும். கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது குமாரர்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்துக்காக கெர்சோனிய கோத்திரம் செய்ய வேண்டிய பணிகள் இவைதான். ஆசாரியனான ஆரோனின் குமாரனான இத்தாமார் இந்த வேலைகளுக்குப் பொறுப்பானவன். “மெராரி கோத்திரத்தில் உள்ள எல்லாக் கோத்திரங்களையும், எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும். படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும். நீங்கள் பயணம் செய்யும்போது, ஆசரிப்புக் கூடாரத்திற்கான மரச் சட்டங்களை, இவர்களே சுமந்து செல்ல வேண்டும். அதோடு பாதங்களையும், தாழ்ப்பாள்களையும், தூண்களையும். பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார். கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர். படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர். கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர். எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர். கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர். படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர். எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர். மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர். அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர். எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர். எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர். படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580. எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.

எண்ணாகமம் 4:21-49 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி: கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க. முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக. பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது: அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும், பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள். கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள். கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும். மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க, முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய். ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள். ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள். அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர். மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. லேவியருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும், மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும், எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.