எண்ணாகமம் 22:31-35
எண்ணாகமம் 22:31-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார். அங்கே யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் வீதியில் நிற்பதை அவன் கண்டான். உடனே பிலேயாம் வணங்கி, முகங்குப்புற விழுந்தான். அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் அவனிடம், “நீ ஏன் உன் கழுதையை இவ்வாறு மூன்றுமுறை அடித்தாய்? நான் உன்னை எதிர்க்கவே இங்கு வந்திருக்கிறேன். உன்னுடைய பாதை எனக்கு முன்பாகத் துணிகரமானதாய் இருக்கிறது. கழுதை என்னைக் கண்டு இந்த மூன்றுதரமும் மறுபக்கமாகத் திரும்பியது. அது அப்படி திரும்பியிராவிட்டால் நிச்சயமாக எப்பொழுதோ நான் உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால் கழுதையையோ தப்பவிட்டிருப்பேன்” என்றார். அப்பொழுது பிலேயாம் யெகோவாவினுடைய தூதனானவரிடம், “நான் பாவம் செய்தேன். என்னை எதிர்ப்பதற்கு நீர் வீதியில் நின்றுகொண்டிருந்ததை நான் அறியவில்லை. இதினிமித்தம் இப்பொழுது நீர் கோபங்கொள்வீரானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றான். யெகோவாவினுடைய தூதனானவர் பிலேயாமிடம், “நீ இந்த மனிதர்களுடன் போ. ஆனால் நான் உனக்குச் சொல்வதையே நீ பேசு” என்றார். எனவே பிலேயாம் பாலாக்கின் தலைவர்களுடன் போனான்.
எண்ணாகமம் 22:31-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற யெகோவாவுடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். யெகோவாவுடைய தூதனானவர் அவனை நோக்கி: “நீ உன்னுடைய கழுதையை இதோடு மூன்றுமுறை அடித்தது ஏன்? உன்னுடைய வழி எனக்கு மாறுபாடாக இருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுமுறை எனக்கு விலகியது; எனக்கு விலகாமல் இருந்திருந்தால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடு வைப்பேன்” என்றார். அப்பொழுது பிலேயாம் யெகோவாவுடைய தூதனை நோக்கி: “நான் பாவம்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாமலிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது பிரியமில்லாமல் இருந்தால், நான் திரும்பிப்போய்விடுகிறேன்” என்றான். யெகோவாவுடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: “அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும்” என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான்.
எண்ணாகமம் 22:31-35 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு தேவன் பிலேயாமின் கண்களைத் திறந்து தூதனைப் பார்க்கும்படிச் செய்தார். கர்த்தருடைய தூதன் சாலையின் மேல் நின்றுகொண்டிருந்தான். அவன் தனது கையில் வாளை ஏந்தியிருந்தான். பிலேயாம் தரையில் பணிந்து வணங்கினான். பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “ஏன் மூன்று முறை கழுதையை அடித்தாய்? நான்தான் உன்னைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்தேன். ஏனெனில் எனக்கு முன்பாக உனது போக்கு சீர்கெட்டதாய் இருக்கிறது. ஆனால் சரியான நேரத்தில் கழுதை என்னைப் பார்த்து என்னிடமிருந்து திரும்பிவிட்டது. இது மூன்றுமுறை நடைபெற்றது. கழுதை அவ்வாறு திரும்பாமல் இருந்திருந்தால் நான் அப்பொழுதே உன்னைக் கொன்றிருப்பேன். நான் உன் கழுதையை உயிர் பிழைக்க வைத்திருப்பேன்” என்றார். பிறகு பிலேயாம் கர்த்தருடைய தூதனிடம், “நான் பாவம் செய்திருக்கிறேன். நீர் சாலையில் நின்றுக்கொண்டிருந்ததை நான் அறிந்துகொள்ளவில்லை. நான் குற்றம் செய்திருந்தால் நான் திரும்பி வீட்டிற்குப் போகிறேன்” என்றான். பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், “இல்லை! நீ இந்த மனிதர்களோடு செல்லலாம். ஆனால் கவனமாக இரு. நான் எதைச் சொல்லச் சொல்லுகிறேனோ அதையே சொல்லவேண்டும்” என்றார். எனவே பிலேயாம் பாலாக் அனுப்பிய மனிதர்களோடு சென்றான்.
எண்ணாகமம் 22:31-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார். அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப்போய்விடுகிறேன் என்றான். கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடேகூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையை மாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடே கூடப்போனான்.