எண்ணாகமம் 16:1-35

எண்ணாகமம் 16:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்தின் பேரனும், இத்சேயாரின் மகனுமான கோராகு என்பவனும், ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான எலியாபின் மக்களான தாத்தான், அபிராம் என்பவர்களும், பேலேத்தின் மகன் ஓன் என்பவனும், இஸ்ரயேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக துணிகரமாய் எழும்பினார்கள். அவர்கள் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து ஒரு குழுவாகச் சேர்ந்துவந்து, அவர்களிடம், “நீங்கள் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள். இந்த மக்கள் சமுதாயம் எல்லோரும், அதிலுள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தமாகவே இருக்கிறார்கள். யெகோவாவும் அவர்களுடன் இருக்கிறார். அப்படியிருக்க நீங்கள் யெகோவாவின் சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மோசே அதைக் கேட்டதும் முகங்குப்புற விழுந்தான். அப்பொழுது மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்த எல்லோரிடமும் யார் அவருடையவன்? யார் பரிசுத்தமானவன்? என்பதை நாளை காலையில் யெகோவா உங்களுக்குக் காண்பிப்பார். அப்படிப்பட்டவனை அவர் தம் அருகே வரப்பண்ணுவார். தாம் தெரிந்துகொள்ளும் மனிதனைத் தம் அருகே வரச்செய்வார். கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றும் எல்லோரும் செய்யவேண்டியதாவது, தூபகிண்ணங்களை எடுத்து, நாளைக்கு யெகோவா முன்னிலையில் அவற்றில் நெருப்புப் போட்டு, நறுமணத்தூளைப் போடுங்கள். அப்பொழுது யெகோவா தெரிந்துகொள்கிறவனே பரிசுத்தமானவனாய் இருப்பான். லேவியரே நீங்கள்தான் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள்! என்றான். பின்பு மோசே கோராகிடம், “லேவியரே! நீங்கள் இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள். இஸ்ரயேலின் இறைவன் மற்ற இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து உங்களை வேறுபிரித்து, யெகோவாவினுடைய இறைசமுக கூடாரத்தில் அவருடைய வேலையைச் செய்யவும், மக்கள் சமுதாயத்தின்முன் நிற்கவும், அவர்களுக்குப் பணிசெய்யவும், உங்களைத் தம் அருகே கொண்டுவந்தது உங்களுக்குப் போதாதோ? அவர் உங்களையும் உங்கள் உடன்சகோதரர் லேவியரையும் தம் அருகே கொண்டுவந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்களோ ஆசாரியப்பட்டத்தையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்கள். நீங்களும் உங்களைப் பின்பற்றுகிறவர்களும் யெகோவாவுக்கு எதிராகவே கூட்டம் கூடியிருக்கிறீர்கள். ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவன் யார்?” என்று கேட்டான். அதன்பின் மோசே, எலியாபின் பிள்ளைகளான தாத்தான், அபிராம் ஆகியோரை அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! பாலும் தேனும் ஓடுகிற ஒரு நாட்டிலிருந்து பாலைவனத்தில் சாகடிக்க நீ எங்களைக் கொண்டுவந்தது போதாதோ? இப்பொழுது நீ எங்கள்மேல் அதிகாரமும் செலுத்தப்பார்க்கிறாயோ? மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற நாட்டிற்குக் கொண்டுவரவுமில்லை, திராட்சைத் தோட்டங்களை உரிமையாகத் தரவுமில்லை. நீ இந்த மனிதரை கண்ணில்லாத குருடராக்க நினைத்தாயோ? நாங்கள் வரவேமாட்டோம்” என்றார்கள். அப்பொழுது மோசே மிகவும் கோபமடைந்தான். அவன் யெகோவாவிடம், “நீர் அவர்களின் காணிக்கைகளை எற்றுக்கொள்ளவேண்டாம். நான் அவர்களிடமிருந்து கழுதையையேனும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவர்களில் ஒருவனுக்கும் அநியாயம் செய்ததுமில்லை” என்றான். பின்பு மோசே கோராகிடம், “நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். நீயும், அவர்களும், ஆரோனும் வரவேண்டும். ஒவ்வொருவரும் தன்தன் தூபகிண்ணத்தை எடுத்து, நறுமணத்தூளை அதற்குள்ளே போட்டு அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒவ்வொன்றாய் 250 தூபகிண்ணங்களுடன் வாருங்கள். நீயும், ஆரோனும், உங்கள் தூபகிண்ணங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றான். எனவே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, அதில் நறுமணத்தூளையும் போட்டுக்கொண்டு சபைக்கூடார வாசலில் மோசேயுடனும், ஆரோனுடனும் நின்றார்கள். கோராகு அவர்களுக்கெதிராக சபைக்கூடார வாசலில் தன்னைப் பின்பற்றியவர்களைக் கூட்டிச் சேர்த்தபோது, யெகோவாவின் மகிமை சபையார் அனைவருக்கும் காணப்பட்டது. அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும், “உடனடியாகவே நான் அவர்களை அழிக்கும்படி இந்தச் சபையாரிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்ளுங்கள்” என்றார். உடனே மோசேயும், ஆரோனும் முகங்குப்புற விழுந்து, “இறைவனே! எல்லா மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனே! ஒருவன் மட்டும் பாவம்செய்கையில் நீர் சபையார் அனைவர்மேலும் கோபமாயிருப்பீரோ!” என்று கதறினார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீங்கள் கோராகு, தாத்தான், ‘அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள் என்று நீ சபையாருக்குச் சொல்’ ” என்றார். மோசே எழுந்து தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவனைத் தொடர்ந்து இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் போனார்கள். அவன் சபையாரைப் பார்த்து, “கொடுமையான இந்த மனிதர்களின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள். அவர்களுக்குரிய எதையும் தொடவேண்டாம். மீறினால் அவர்களுடைய பாவங்களினால் அவர்களுக்கு வரும் தண்டனையில் நீங்களும் அள்ளுண்டு போவீர்கள்” என்றான். எனவே அவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோனார்கள். அப்பொழுது தாத்தானும், அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவிகளுடனும், தங்கள் பிள்ளைகளுடனும், குழந்தைகளுடனும் அவர்களுடைய கூடாரங்களின் வாசலில் நின்றார்கள். மோசே அவர்களிடம், “இவற்றைச் செய்யும்படி யெகோவாவே என்னை அனுப்பியிருக்கிறார் என்பதையும், இது என்னுடைய சொந்த எண்ணம் அல்ல என்பதையும் இப்போது நடக்கப்போவதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இந்த மனிதர் இயற்கை மரணத்தை அடைந்து, மனிதர்களுக்கு நேரிடுகிறதுபோல மட்டும் அனுபவிப்பார்களானால், யெகோவா என்னை அனுப்பவில்லை. ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். அவன் இவற்றைச் சொல்லி முடித்ததுமே அவர்களுக்குக் கீழே இருந்த நிலம் இரண்டாகப் பிளந்தது. பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும், கோராகின் ஆட்களையும், அவர்களின் உடைமைகளையும் விழுங்கிப்போட்டது. அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். அவர்கள் கூக்குரலைக் கேட்ட, சுற்றி நின்ற இஸ்ரயேலர் எல்லோரும், “பூமி எங்களையும் விழுங்கப்போகிறது” என்று சத்தமிட்டுக்கொண்டு விரைந்து ஓடினார்கள். அத்துடன் யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து, தூபங்காட்டிக்கொண்டிருந்த அந்த 250 மனிதரையும் எரித்துப்போட்டது.

எண்ணாகமம் 16:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லேவிக்குப் பிறந்த கோகாத்தின் மகனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் மகனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள். மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார். ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லோரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, யெகோவாவுடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது யெகோவா எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள்” என்றான். பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்; யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான். பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை; இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ? மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள். அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான். பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் யெகோவாவுடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய 250 தூபகலசங்களையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள். அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி: “இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன்” என்றார். அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார். உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள். அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான். அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள். அப்பொழுது மோசே: “இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் யெகோவா என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என்னுடைய மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது. அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள். அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.

எண்ணாகமம் 16:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)

கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகியோர் மோசேக்கு எதிராகக் கிளம்பினார்கள். (கோராகு இத்சேயாரின் குமாரன். இத்சேயார் கோகாத்தின் குமாரன். கோகாத் லேவியின் குமாரன். தாத்தானும், அபிராமும் சகோதரர்கள். இவர்கள் எலியாபின் பிள்ளைகள். ஓன் பேலேத்தின் குமாரன். இவர்கள் அனைவரும் ரூபன் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.) இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் ஒரு குழுவாகி மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராகப் பேச வந்தனர். அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து, “நீங்கள் அளவை மிஞ்சிப் போய் விட்டீர்கள். நீங்கள் தவறானவர்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் மத்தியில் கர்த்தர் வாழ்கிறார்! கர்த்தரின் மற்ற ஜனங்களைவிட, நீங்கள் உங்களை மட்டும் மிக முக்கிமானவர்களாக்கிக் கொண்டீர்கள்” என்றனர். இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார். எனவே, கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதை கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான். மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் உங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் மேலும் மகிழ்ச்சி அடையவேண்டும், இல்லையா? மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள். பரிசுத்தக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தம்மருகே உங்களை வரச்செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைக்கு நீங்கள் உதவ வேண்டும். இது போதாதா? ஆசாரியர்களுக்கு உதவும்படி லேவியர்களாகிய உங்களை கர்த்தர் தன்னருகே அனுமதித்திருக்கிறார். ஆனால் நீங்கள் இப்போது ஆசாரியர்களாக மாறப் பார்க்கிறீர்கள். நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக நிற்கிறீர்கள். ஆரோன் ஏதாவது தவறு செய்தானா? இல்லையே! அவ்வாறு இருக்க அவனுக்கு எதிராக ஏன் முறையிடுகிறீர்கள்?” என்றான். பிறகு மோசே எலியாப்பின் குமாரர்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! நீர் ஏராளமான நன்மைகள் நிறைந்த நாட்டிலிருந்து வெளியேற்றி எங்களை கொல்வதற்காக இப்பாலைவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர். இப்போது எங்களை விட உம்மை திறமை மிக்கவராக காட்ட விரும்புகிறீர். நாங்கள் ஏன் உம்மை பின்பற்ற வேண்டும்? தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள் நீர் எங்களைக் கொண்டு வரவில்லை. நீர் எங்களுக்கு வயல்களோ, திராட்சை தோட்டங்களோ கொடுக்கவில்லை. இந்த ஜனங்களையெல்லாம் உங்கள் அடிமைகளாக்குவதுதான் உங்கள் எண்ணமா? முடியாது. நாங்கள் அங்கே வரமாட்டோம்” என்றனர். எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான். பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான். நீங்கள் ஒவ்வொருவரும் நறுமணப் பொருட்களை இடுகின்ற தூபகலசத்தைக் கொண்டு வந்து அவற்றை கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். மூப்பர்களுக்குரிய 250 தூபகலசத்தோடு உனக்கும், ஆரோனுக்குமாக இரண்டு தூப கலசங்கள் இருக்கும்” என்றான். எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர். கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். அவர்களை இப்போதே அழிக்கப் போகிறேன்!” என்றார். ஆனால் மோசேயும், ஆரோனும் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கிக் கதறினார்கள், “தேவனே! நீர் மாம்சமான எல்லாருடைய ஆவிகளுக்கும் தேவன். ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்தால் நீர் முழு சபையினர் மீதும் கோபங்கொள்ளலாமா?” என்றனர். பிறகு கர்த்தர் மோசேயிடம், “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுக்கொண்டார். மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர். மோசே, ஜனங்களை எச்சரித்து. “அந்தத் தீய மனிதர்களின் கூடாரங்களை விட்டு விலகிப் போங்கள், அவர்களுக்குரிய எதையும் தொடாதீர்கள், நீங்கள் இவ்வாறு செய்தால் அவர்களது பாவத்தின் காரணமாக அழிக்கப்படுவீர்கள்” என்றான். எனவே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே வந்து, தங்கள் கூடார வாசல்களில், தங்கள் மனைவி, குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தனர். பிறகு மோசே, “இவை எல்லாவற்றையும் செய்யுமாறு கர்த்தர் என்னை அனுப்பினார் என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இதுதான் அதற்கான சாட்சி. இவை எனது சொந்த எண்ணங்கள் அல்ல என்பதை இவை உங்களுக்குக் காட்டும். இங்குள்ள மனிதர்கள் மரித்துப்போவார்கள். அவர்கள் சாதாரண ஜனங்களைப் போன்று மரிப்பார்களேயானால் பிறகு கர்த்தர் உண்மையில் என்னை அனுப்பவில்லை என்று தெரிந்துக்கொள்ளுங்கள். ஆனால் கர்த்தர் இவர்களை அசாதாரணமான முறையில் மரிக்க செய்வாரானால், இவர்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூமி பிளந்து இந்த மனிதர்களை அப்படியே விழுங்கிவிடும். இதுதான் அதற்கு சான்று, இவர்கள் உயிரோடு தங்கள் கல்லறைக்குள் புதைக்கப்படுவார்கள். இவர்களுக்குரிய அனைத்தும், இவர்களோடேயே போய்ச்சேரும்” என்றான். மோசே இவற்றைச் சொல்லி முடித்ததும், அவர்கள் நின்ற இடத்தில் பூமி பிளந்தது. பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை விழுங்கியது போல் இருந்தது. கோரகின் ஜனங்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களுக்குரிய அனைத்தும் பூமிக்குள் சென்றுவிட்டன. அவர்கள் தங்கள் கல்லறைக்குள் உயிரோடு சென்றனர். அவர்களுக்குரிய பொருட்களும், அவர்களோடு சென்றன. பிறகு பூமி மூடிக்கொண்டது. அவர்கள் முகாமிலிருந்து மூடப்பட்டு மடிந்தனர்! இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், “இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்” என்று கதறினர். பிறகு கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபதீபம் காட்டிய 250 தலைவர்களையும் அழித்துப் போட்டது.

எண்ணாகமம் 16:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார். ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான். பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்; கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான். பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை. இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ? மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள். அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான். பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபக்கலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான். அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள். அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி: இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார். அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார். உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள். அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான். அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள். அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான். அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள். அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது.