எண்ணாகமம் 14:6-10
எண்ணாகமம் 14:6-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாட்டை ஆராய்ந்து அறியச்சென்றவர்களில் நூனின் மகன் யோசுவாவும், எப்புன்னேயின் மகன் காலேப்பும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். அவர்கள் முழு இஸ்ரயேல் சபையையும் பார்த்து, “நாங்கள் கடந்துசென்று ஆராய்ந்து அறிந்த நாடு மிகமிக நல்ல நாடு. யெகோவா எங்களில் பிரியமாயிருந்தால், பாலும் தேனும் வழிந்தோடும் அந்த நாட்டிற்கு எங்களை வழிநடத்தி அதை எங்களுக்குத் தருவார். நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாக மட்டும் கலகம் செய்யாதீர்கள். அந்நாட்டு மக்களுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், நாங்கள் அவர்களை அழித்துவிடுவோம். அவர்களுடைய பாதுகாப்பு அவர்களைவிட்டுப் போய்விட்டது. யெகோவா எங்களோடிருக்கிறார். நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்” என்றார்கள். ஆனால் முழுசபையாரும் அவர்களுக்குக் கல்லெறியவேண்டுமென பேசிக்கொண்டார்கள். அவ்வேளையில் யெகோவாவின் மகிமை சபைக் கூடாரத்தில் எல்லா இஸ்ரயேலருக்கும் முன்பாகத் தோன்றியது.
எண்ணாகமம் 14:6-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். யெகோவா நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லோரும் சொன்னார்கள்; உடனே யெகோவாவுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது.
எண்ணாகமம் 14:6-10 பரிசுத்த பைபிள் (TAERV)
யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் குமாரன். காலேப் எப்புன்னேயின் குமாரன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர். அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது.
எண்ணாகமம் 14:6-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.