எண்ணாகமம் 14:26-31

எண்ணாகமம் 14:26-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அத்துடன் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இந்த கொடுமையான சமுதாயம் எவ்வளவு காலத்திற்கு எனக்கு விரோதமாக முறுமுறுக்கும்? முறுமுறுக்கும் இந்த இஸ்ரயேலர்களின் முறையீட்டை நான் கேட்டிருக்கிறேன். எனவே நீ அவர்களிடம், ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, எனக்கு கேட்கும்படி நீங்கள் முறுமுறுத்த அதே காரியங்களை நான் உங்களுக்குச் செய்வேன் என்பது நிச்சயம்’ என அவர்களுக்குச் சொல் என்று யெகோவா அறிவிக்கிறார். இப்பாலைவனத்திலே உங்கள் உடல்கள் விழும். குடிமதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்களும், எனக்கு விரோதமாக முறுமுறுத்தவர்களுமான நீங்கள் ஒவ்வொருவரும் விழுவீர்கள். நான் என் கைகளை உயர்த்தி, ஆணையிட்டு, ‘நீங்கள் குடியிருப்பதற்காக வாக்குப்பண்ணிக்கொடுத்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகன் காலேப்பையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு எவனும் போவதில்லை’ என்று சொல்கிறேன். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போவார்களே’ என நீங்கள் சொன்ன உங்கள் பிள்ளைகளையோ, நீங்கள் புறக்கணித்த நாட்டின் பலனை அனுபவிப்பதற்கு அங்கு கொண்டுவருவேன்.

எண்ணாகமம் 14:26-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன். நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார். இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நுழைவதில்லை. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்களுடைய குழந்தைகளையோ நான் அதில் நுழையச் செய்வேன்; நீங்கள் அசட்டைசெய்த தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.

எண்ணாகமம் 14:26-31 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் குமாரனான காலேபும், நூனின் குமாரனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள்.

எண்ணாகமம் 14:26-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன். நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.