எண்ணாகமம் 14:20-24

எண்ணாகமம் 14:20-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

எண்ணாகமம் 14:20-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன். ஆனாலும் நான் வாழ்வது நிச்சயம்போலவும், யெகோவாவினுடைய மகிமை பூமியை நிரப்புவது நிச்சயம்போலவும், என் மகிமையையும், எகிப்திலுள்ள பாலைவனத்தில் நான் செய்த அற்புத அடையாளங்களையும் கண்டும், எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை பத்துமுறை சோதித்த எவனும், அவர்களுடைய முற்பிதாக்களுக்குத் தருவேன் என நான் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை ஒருபோதும் காணமாட்டான் என்பதும், என்னை அவமதித்து நடந்த எவனும் அதை ஒருபோதும் காணமாட்டான் என்பதும் நிச்சயம். ஆனால், என் பணியாளன் காலேப் ஒரு வித்தியாசமான ஆவி உடையவனாயும், தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றுகிறவனாயும் இருப்பதால், அவன் போய்ப் பார்த்த அந்த நாட்டிற்குள் நான் அவனைக் கொண்டுவருவேன். அவனுடைய சந்ததிகளும் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 14:20-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன். பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும், அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

எண்ணாகமம் 14:20-24 பரிசுத்த பைபிள் (TAERV)

இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள்.