எண்ணாகமம் 11:16-35

எண்ணாகமம் 11:16-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு யெகோவா மோசேயிடம்: “இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் உனக்குத் தெரிந்திருக்கும் இஸ்ரயேலின் முதியவர்களில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிக்கொண்டு வா. அவர்கள் உன்னுடன் சபைக் கூடாரத்தில் நிற்கும்படி அங்கு அவர்களை வரச்சொல். நான் கீழே வந்து உன்னோடு பேசுவேன். பின்பு நான் உன்மேல் இருக்கிற ஆவியானவரை அவர்கள்மேலும் வைப்பேன். மக்களின் பாரத்தைச் சுமப்பதற்கு அவர்கள் உதவி செய்வார்கள். அப்பொழுது நீ அப்பாரத்தைத் தனிமையாய் சுமக்க வேண்டியிராது. “எனவே நீ மக்களிடம்: ‘நீங்கள் நாளைய தினத்திற்கு ஆயத்தமாக உங்களை அர்ப்பணம் செய்யுங்கள், நாளைக்கே நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள். “நாங்கள் சாப்பிடுவதற்கு எங்களுக்கு இறைச்சி கிடைக்காதோ? எகிப்தில் நாங்கள் சந்தோஷமாய் இருந்தோமே என்று சொல்லி நீங்கள் அழுததை யெகோவா கேட்டார்!” இப்பொழுது யெகோவா உங்களுக்கு இறைச்சி தருவார். நீங்கள் அதைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் அதை ஒன்றிரண்டு நாட்களுக்கோ, ஐந்து பத்து இருபது நாட்களுக்கு மட்டுமோ சாப்பிடமாட்டீர்கள். ஒரு முழு மாதமும் சாப்பிடுவீர்கள். நீங்கள் அதை மூக்குமுட்ட தின்று, அதை அருவருக்கும்வரை சாப்பிடுவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்களோடிருக்கிற யெகோவாவைப் புறக்கணித்து, “நாங்கள் ஏன் எகிப்தைவிட்டு வந்தோம்?” என்று சொல்லி அவருக்கு முன்பாக அழுதிருக்கிறீர்கள் என்று சொல்’ ” என்றார். அதற்கு மோசே: “என்னுடன் ஆறு இலட்சம் மனிதர் இருக்கிறார்கள், ‘நீரோ ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு இறைச்சி தருவதாகச் சொல்கிறீர்!’ அவர்களுக்காக எங்களிடமுள்ள ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் வெட்டப்பட்டாலும் அவையும் போதாது? கடலிலுள்ள எல்லா மீன்களையும் பிடித்தாலும் அவையும் அவர்களுக்குப் போதாதே?” என்றான். அதற்கு யெகோவா மோசேயிடம், “யெகோவாவினுடைய கரம் குறுகியிருக்கிறதோ? நான் உனக்குச் சொன்னது உண்மையாய் நடக்குமோ, நடக்காதோ என இருந்து பார்” என்றார். யெகோவா சொன்னவற்றையெல்லாம் மோசே வெளியே போய் மக்களுக்குச் சொன்னான். அதன்பின் அவன் அவர்களில் எழுபது சபைத்தலைவர்களை ஒன்றுசேர்த்து சபைக் கூடாரத்தைச் சுற்றி நிறுத்தினான். அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி, மோசேயுடன் பேசினார். பின் அவனில் இருந்த ஆவியானவரை அந்த சபைத்தலைவர்கள் எழுபதுபேர் மேலும் வைத்தார். ஆவியானவர் அவர்கள்மேல் வந்தவுடன், அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் அவர்கள் திரும்ப இறைவாக்கு உரைக்கவில்லை. எல்தாத், மேதாத் என்னும் இரண்டு மனிதர்கள் தங்கள் முகாமிலேயே தங்கி இருந்தார்கள். அவர்களும் அந்தச் சபைத்தலைவர்களுடன் குறிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் சபைக் கூடாரத்திற்குப் போகவில்லை. அவர்கள்மேலும் அந்த ஆவியானவர் இறங்கியபோது, அவர்கள் தங்கள் முகாம்களுக்குள்ளே இறைவாக்கு உரைத்தனர். ஒரு வாலிபன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் முகாமில் இறைவாக்கு உரைக்கிறார்கள்” என்று சொன்னான். அப்பொழுது நூனின் மகனும் மோசேயின் உதவியாளனுமான யோசுவா என்னும் வாலிபன் மோசேயிடம், “என் ஆண்டவனே அவர்கள் பேசுவதை நிறுத்தும்!” என்றான். ஆனால் மோசேயோ, அவனிடம், “நீ எனக்காகப் பொறாமைகொண்டு இதைச் சொல்கிறாய்? யெகோவாவின் மக்கள் எல்லாம் இறைவாக்குரைப்போராய் இருக்கவேண்டும் என்றும், யெகோவா அவர்கள்மேல் தமது ஆவியானவரை வைக்கவேண்டும் என்றுமே நான் விரும்புகிறேன்!” என்றான். பின்பு மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் முகாமுக்குத் திரும்பினார்கள். அப்பொழுது யெகோவாவிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டு, கடலில் இருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது. அவை முகாமைச் சுற்றிலும் நிலத்திலிருந்து மூன்றடி உயரத்திற்குப் போடப்பட்டன. முகாமிலிருந்து எப்பக்கம் போனாலும் ஒரு நாள் பயணதூரம்வரை அவை கிடந்தன. அன்று பகல் முழுவதும், இரவு முழுவதும், அடுத்தநாள் முழுவதும் மக்கள் வெளியே போய், காடைகளைச் சேர்த்தார்கள். பத்து ஓமருக்குக் குறைவாக ஒருவனுமே காடைகளைச் சேர்க்கவில்லை. அவர்கள் அவற்றை முகாமைச் சுற்றிப் பரப்பிவைத்தார்கள். அவர்கள் அந்த இறைச்சியை மென்று கொண்டிருக்கும்போதே, அதை விழுங்குவதற்கு முன்னே அவர்கள்மேல் யெகோவாவின் கோபம் மூண்டது. யெகோவா அவர்களை மிகக் கொடிய கொள்ளைநோயினால் வாதித்தார். மற்ற உணவில் அடங்கா ஆசைகொண்டதனால் செத்த மக்களை அங்கே புதைத்தார்கள்; அதனால் அந்த இடம் கிப்ரோத் அத்தாவா எனப் பெயரிடப்பட்டது. பின்பு மக்கள் கிப்ரோத் அத்தாவாவை விட்டுப் புறப்பட்டுபோய் ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

எண்ணாகமம் 11:16-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களுக்கு மூப்பர்களும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடு வந்து நிற்கும்படிசெய். அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடு பேசி, நீ ஒருவன் மட்டும் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடு அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன். நீ மக்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாக இருந்தது என்றும், யெகோவாவுடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி யெகோவா உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். நீங்கள் ஒருநாள், இரண்டுநாட்கள், ஐந்துநாட்கள், பத்துநாட்கள், இருபதுநாட்கள் மட்டும் இல்லை, ஒரு மாதம்வரை சாப்பிடுவீர்கள்; அது உங்களுடைய மூக்கிலிருந்து புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகும்வரை சாப்பிடுவீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற யெகோவாவை அசட்டைசெய்து, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல்” என்றார். அதற்கு மோசே: “என்னுடன் இருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் சாப்பிடும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்தின் மீன்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா” என்றான். அதற்குக் யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்” என்றார். அப்பொழுது மோசே புறப்பட்டு, யெகோவாவுடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். யெகோவா மேகத்தில் இறங்கி, அவனோடு பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பர்களாகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினவுடன் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் முகாமில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்திற்குப் போகப் புறப்படாமலிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், முகாமில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஒரு பிள்ளை ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் முகாமில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான். உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபர்களில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் மகனுமாகிய யோசுவா மறுமொழியாக: “என்னுடைய ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைசெய்யும்” என்றான். அதற்கு மோசே: “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? யெகோவாவுடைய மக்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி, யெகோவா தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கச்செய்தால் நலமாக இருக்குமே என்றான். பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் முகாமிலே வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள். தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே யெகோவாவுடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; யெகோவா மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா என்று பெயரிட்டான். பின்பு, மக்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்திற்குப் பயணம்செய்து, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

எண்ணாகமம் 11:16-35 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் 70 முதிய தலைவர்களை என்னிடம் அழைத்து வா. இவர்கள் இஸ்ரவேலர்களின் தலைவர்களாயிருக்கிறார்கள். அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்து வா. அவர்கள் உன்னோடு நிற்கட்டும். பிறகு நான் இறங்கி வந்து உன்னோடு பேசுவேன். இப்போது ஆவியானவர் உன்மேல் உள்ளார். ஆனால் அவர்களுக்கும் ஆவியை அளிப்பேன். பிறகு இந்த ஜனங்களைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பில் அவர்கள் உனக்கு உதவுவார்கள். இவ்வகையில் நீ மட்டும் தனியாக இவர்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்காது.” “இவற்றை ஜனங்களிடம் கூறு: நாளைக்காக உன்னைத் தயார் செய்துகொள்! நாளை நீங்கள் இறைச்சி உண்பீர்கள். நீங்கள் முறையிட்டபோது கர்த்தர் அதனைக் கேட்டார். ‘எங்களுக்கு உண்ண இறைச்சி வேண்டும், எகிப்து எங்களுக்கு நன்றாக இருந்தது!’ என்று நீங்கள் சொன்ன சொற்களை கர்த்தர் கேட்டார். எனவே, இப்போது கர்த்தர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார். நீங்கள் ஒரு நாள் அல்லது, இரு நாள் அல்லது, ஐந்து நாள் அல்லது, பத்து நாள் அல்லது, இருபது நாட்களுக்கு மேலாக இறைச்சியை உண்பீர்கள்! நீங்கள் இந்த மாதம் முழுவதும்கூட இறைச்சியை உண்பீர்கள். அது உங்களுக்குத் திகட்டும்வரைக்கும் உண்பீர்கள். நீங்கள் கர்த்தருக்கு எதிராக முறையிட்டதினால் இது உங்களுக்கு ஏற்படும். கர்த்தர் உங்களோடு வாழ்கிறார். உங்களது தேவைகளை அவர் அறிவார். ஆனால் நீங்கள் அழுதீர்கள்! அவரிடம் முறையிட்டீர்கள். நாங்கள் எகிப்தை விட்டு ஏன் வந்தோம்? என்று கூறுகிறீர்கள்” என்றார். மோசே, “கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர். நாம் இங்குள்ள அத்தனை ஆடுகளையும், மாடுகளையும் கொன்றாலும் கூட அது போதுமானதாக இராது. கடலில் உள்ள அத்தனை மீன்களையும் பிடித்தாலும்கூட அவை போதுமானதாக இராது” என்றான். ஆனால் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியுமா? என்பதை இப்போது காண்பாய்” என்றார். எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான். பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார். மோசேயின் மேல் ஆவியானவர் இருந்தார். அதே ஆவியை 70 முதிய தலைவர்கள் மேலும் கர்த்தர் வைத்தார். அவர்கள்மேல் ஆவி வந்ததும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டனர். அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்” என்றான். நூனின் குமாரனாகிய யோசுவா மோசேயிடம், “மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்கவேண்டும்” என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.) ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான். பிறகு மோசேயும் இஸ்ரவேல் தலைவர்களும் கூடாரத்திற்குள் சென்றனர். பிறகு கடலிலிருந்து பெருங்காற்று அடிக்குமாறு கர்த்தர் செய்தார். அக்காற்று காடைகளைக் கொண்டு வந்தது. காடைகள் கூடாரத்தைச் சுற்றிலும் பறந்து வந்து தரையில் விழுந்தன. தரையின் மேல் மூன்றடி உயரத்திற்கு அவை விழுந்துகிடந்தன. ஒரு மனிதன் எல்லா திசைகளிலும் ஒரு நாள் முழுவதும் நடக்கும் தூரம்வரை அக்காடைகள் கிடந்தன. ஜனங்கள் மகிழ்ச்சியோடு சென்றனர்! அவர்கள் இரவும் பகலுமாக அவற்றைச் சேகரித்தனர். ஒவ்வொருவரும் மறுநாளும் அவற்றைச் சேகரித்தனர். அவர்கள் குறைந்தபட்சம் 60 மரக்கால் அளவு சேர்த்தனர். அவற்றை வெயிலில் காயும்படி முகாம்களைச் சுற்றிலும் பரப்பி வைத்தனர். ஜனங்கள் அந்த இறைச்சியை உண்ண ஆரம்பித்தனர். ஆனால் கர்த்தரோ பெருங்கோபம் கொண்டார். அவர்கள் வாயில் இறைச்சி இருக்கும்போதே, அவற்றை அவர்கள் தின்று முடிக்கும் முன்னரே அவர்கள் நோயுறும்படி கர்த்தர் செய்தார். அதனால் பலர் மரித்துப்போனார்கள். அங்கேயே புதைக்கப்பட்டனர். எனவே ஜனங்கள் அந்த இடத்திற்கு “கிப்ரோத் அத்தாவா” என்று பெயர் வைத்தனர். இறைச்சி மேல் அதிக ஆசை கொண்டு மரித்தவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்று இதற்கு பொருள். கிப்ரோத் அத்தாவா என்ற இடத்திலிருந்து அவர்கள் பயணப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.

எண்ணாகமம் 11:16-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படிசெய். அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன். நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல, ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார். அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான். அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார். அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான். உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான். அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான். பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது, அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள். தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான். பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.