எண்ணாகமம் 10:11-36

எண்ணாகமம் 10:11-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறிய பிறகு இரண்டாம் வருடம், இரண்டாம் மாதம், இருபதாம் நாளில் சாட்சியின் கூடாரத்தின் மேலாக இருந்த மேகம் மேலெழுந்தது. அப்பொழுது இஸ்ரயேலர் சீனாய் பாலைவனத்தை விட்டுப் புறப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணம்பண்ணி, அந்த மேகம் பாரான் பாலைவனத்தில் தங்கும்வரை போய்க்கொண்டிருந்தார்கள். யெகோவா மோசேயின் மூலம் கொடுத்த கட்டளையின்படியே, இவ்விதம் முதல்முறையாக அவர்கள் புறப்பட்டார்கள். முதலாவதாக, யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் சென்றன. அம்மினதாபின் மகன் நகசோன் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். அப்பொழுது இறைசமுக கூடாரமும் கழற்றப்பட்டது. கெர்சோனியரும், மெராரியரும் அதைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். அடுத்ததாக, ரூபனின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. சேதேயூரின் மகன் எலிசூர் அவர்களுக்குத் தலைமை வகித்தான். சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். தேகுயேலின் மகன் எலியாசாப், காத் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். அதன்பின் கோகாத்தியர் பரிசுத்த பொருட்களைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். அவர்கள் போய்ச்சேருமுன் இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட வேண்டியிருந்தது. அடுத்ததாக, எப்பிராயீமின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. அவர்களுக்கு அம்மியூதின் மகன் எலிஷாமா தலைமை தாங்கினான். பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். கடைசியாக, தாணின் முகாம் பிரிவுகள் எல்லாப் பிரிவுகளுக்கும் பின்னணிக் காவலாக, தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. அம்மிஷதாயின் மகன் அகியேசேர் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். ஏனானின் மகன் அகீரா, நப்தலி கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். இஸ்ரயேலரின் பிரிவுகள் புறப்பட்டபோது, இவ்விதமாய் அவர்களின் அணிவகுப்பு ஒழுங்காய் அமைந்தது. அதன்பின் மோசே மீதியானியனான தன் மாமன் ரெகுயேலின் மகன் ஒபாவிடம், “இப்பொழுது நாங்கள் யெகோவா எங்களுக்குத் தருவேன் என வாக்குக்கொடுத்த இடத்திற்குப் போகிறோம். நீயும் எங்களுடன் வா. நாங்கள் உன்னை நன்றாக நடத்துவோம். ஏனெனில், யெகோவா இஸ்ரயேலருக்கு நன்மைகளைத் தருவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்” என்றான். ஆனால் ஒபாவோ, “நான் உங்களுடன் வரமாட்டேன்; நான் என் சொந்த நாட்டிற்கும், என் சொந்த மக்களிடத்திற்கும் போகப்போகிறேன்” என்றான். அதற்கு மோசே, “தயவுசெய்து நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம். நாங்கள் பாலைவனத்தில் எங்கே முகாமிடவேண்டும் என்பது உனக்குத் தெரியும். நீ எங்கள் வழிகாட்டியாயிரு. நீ எங்களுடன் வந்தால், யெகோவா எங்களுக்குத் தரப்போகிற எல்லா நன்மைகளையும் நாங்கள் உன்னோடு பகிர்ந்துகொள்வோம்” என்றான். அப்படியே அவர்கள் யெகோவாவினுடைய மலையை விட்டுப் புறப்பட்டு மூன்று நாட்கள் பயணம் செய்தார்கள். தங்கும் இடம் ஒன்றைக் கண்டுகொள்வதற்காக அந்த மூன்றுநாட்களும் யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு முன்னால் சென்றது. அவர்கள் முகாமைவிட்டுப் புறப்பட்டபோது, பகலில் யெகோவாவின் மேகம் அவர்களுக்கு மேலாக இருந்தது. உடன்படிக்கைப்பெட்டி புறப்பட்டபோதெல்லாம் மோசே சொன்னது: “யெகோவாவே, எழுந்தருளும்! உமது பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; உமது எதிரிகள் உமக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.” உடன்படிக்கைப்பெட்டி தங்கும்போதெல்லாம் மோசே சொன்னது: “யெகோவாவே, எண்ணிலடங்கா பல்லாயிரக்கணக்கான இஸ்ரயேலரிடம் திரும்பி வாரும்.”

எண்ணாகமம் 10:11-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது. அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திரத்திலிருந்து தங்களுடைய பயண வரிசைகளின்படி புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்திரத்தில் தங்கிற்று. இப்படியே யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பயணம் செய்தார்கள். யூதா சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு முதல் புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவனாக இருந்தான். இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான். செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான். அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் சந்ததியாரும் மெராரி சந்ததியாரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்குச் சேதேயூரின் மகன் எலிசூர் தலைவனாக இருந்தான். சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான். காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான். கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன்பு மற்றவர்கள் வாசஸ்தலத்தை நிறுவுவார்கள். அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மியூதின் மகன் எலிஷாமா தலைவனாக இருந்தான். மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான். பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான். அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய முகாமின் கொடி எல்லா முகாம்களுக்கும் பின்னாக அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தலைவனாக இருந்தான். ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான். நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏனானின் மகன் அகீரா தலைவனாக இருந்தான். இஸ்ரவேல் மக்கள் புறப்பட்டபோது, இந்த விதமாகத் தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே பயணம்செய்தார்கள். அப்பொழுது மோசே தன்னுடைய மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய மகனான ஓபாவை நோக்கி: “உங்களுக்குத் தருவேன் என்று யெகோவா சொன்ன இடத்திற்கு நாங்கள் பயணமாகப் போகிறோம்; நீயும் எங்களோடு கூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; யெகோவா இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்” என்றான். அதற்கு அவன்: “நான் வரக்கூடாது; என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போகவேண்டும் என்றான். அப்பொழுது மோசே: “நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்திரத்திலே நாங்கள் முகாமிடும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய். நீ எங்களோடு வந்தால், யெகோவா எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம்” என்றான். அவர்கள் யெகோவாவுடைய மலையைவிட்டு, மூன்றுநாட்கள் பயணமாக போனார்கள்; மூன்றுநாட்கள் பயணத்திலும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன்பு சென்றது. அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, யெகோவாவுடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது புறப்படும்போது, மோசே: “யெகோவாவே, எழுந்தருளும், உம்முடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக” என்பான். அது தங்கும்போது: “யெகோவாவே, அநேக ஆயிரம்பேர்களாகிய இஸ்ரவேலர்களிடத்தில் திரும்புவீராக” என்று சொல்லுவான்.

எண்ணாகமம் 10:11-36 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாவது மாதத்தின் 20ஆம் நாளில், உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் இருந்த மேகமானது எழும்பிற்று. எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் சீனாய் பாலைவனத்தைக் கடந்து பாரான் பாலைவனத்தில் நிற்கும்வரை பயணம் செய்தனர். இதுவே இஸ்ரவேல் ஜனங்கள் தம் முகாமை கலைத்துவிட்டு, முதல் முதலாக புறப்பட்ட சம்பவம் ஆகும். மோசேயிடம் கர்த்தர் ஆணையிட்டபடியே அவர்கள் நகர்ந்து சென்றனர். யூதாவின் முகாமில் உள்ள மூன்று குழுக்களும் முதலில் சென்றன. அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதல் குழுவானது யூதாவின் கோத்திரமாகும். அம்மினதாபின் குமாரனான நகசோன் அக்குழுவின் தலைவனாக இருந்தான். அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் குமாரனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான். அதற்கு அடுத்து செபுலோனின் கோத்திரம் வந்தது. ஏலோனின் குமாரனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான். பிறகு, பரிசுத்தக் கூடாரம் இறக்கி வைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தைக் கெர்சோன் மற்றும் மெராரி குடும்பத்தில் உள்ளவர்கள் சுமந்துகொண்டு வந்தனர். எனவே, இக்குடும்பத்தவர்கள் இவ்வரிசையில் அடுத்ததாக வந்தனர். பிறகு ரூபனின் முகாமைச் சேர்ந்த மூன்று குழுக்களும் வந்தன, அவர்கள் தம் கொடியோடு பயணம் செய்தனர். முதலில் ரூபனின் கோத்திரம் வந்தது. சேதேயூரின் குமாரன் எலிசூர் இதற்குத் தலைவனாக இருந்தான். அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் குமாரனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான். அதற்கு அடுத்து காத் கோத்திரம் வந்தது, தேகுவேலின் குமாரனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான், பிறகு கோகாத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுத்த இடத்தில் இருக்கும் பரிசுத்தப் பொருட்களைச் சுமந்துவந்தனர். இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் பரிசுத்த கூடாரத்தை அமைத்து முடிப்பார்கள். அதற்குப் பிறகு எப்பிராயீம் கோத்திரத்தின் முகாமில் இருந்து மூன்று குழுக்கள் தங்கள் கொடிகளோடு பயணம் செய்தனர். முதலில் எப்பிராயீமின் கோத்திரம் வந்தது. அம்மியூதின் குமாரனான எலிஷாமா அதற்குத் தலைவனாக இருந்தான். அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் குமாரனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் குமாரனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான். இவ்வரிசையில் உள்ள கடைசி மூன்று கோத்திரங்களும் மற்றக் கோத்திரங்களுக்குப் பாதுகாவலாக இருந்தது. அது தாண் கோத்திரத்தின் பிரிவுகள் ஆகும். அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதலில் தாணின் கோத்திரம் வந்தது. அம்மிஷதாயின் குமாரனான அகியேசேர் அதற்குத் தலைவனாக இருந்தான். அடுத்து ஆசேர் கோத்திரம் வந்தது. ஓகிரானின் குமாரனான பாகியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். நப்தலியின் கோத்திரம் அதற்கு அடுத்து வந்தது. ஏனானின் குமாரனான அகிரா அதற்குத் தலைவனாக இருந்தான். இவ்வாறுதான் இஸ்ரவேல் ஜனங்கள் ஓரிடத்தை விட்டு இன்னொரு இடத்துக்குப் போகும்போது வரிசை முறையைக் கைக்கொண்டனர். ஓபாப், மீதியானியனான ரெகுவேலின் குமாரன். (ரெகுவேல் மோசேயின் மாமனார்.) மோசே ஓபாபிடம், “தேவன் எங்களுக்கு தருவதாக வாக்களித்துள்ள நாட்டிற்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். எங்களோடு வாரும், உமக்கு நாங்கள் நல்லவர்களாக இருப்போம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் நன்மை செய்வதாக வாக்களித்துள்ளார்” என்று கூறினார். ஆனால் ஓபாப், “இல்லை நான் உங்களோடு வரமாட்டேன். நான் எனது தாய் நாட்டிற்குத் திரும்பிப் போகிறேன். அங்கே என் சொந்த ஜனங்கள் இருக்கின்றனர்” என்றான். பிறகு மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதிரும், எங்களைவிட இந்தப் பாலைவனத்தைப்பற்றி உமக்கு நன்றாகத் தெரியும். நீர் எங்களுக்கு வழிகாட்டியாக இரும். நீர் எங்களோடு வந்தால், கர்த்தர் எங்களுக்கு அளிக்கும் நன்மையை உம்மோடு பகிர்ந்துகொள்வோம்” என்றான். எனவே, ஓபாப் ஒப்புக்கொண்டான். பிறகு அவர்கள் கர்த்தரின் மலையிலிருந்து பயணம் செய்தனர். ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு முன்னே சென்றார்கள். மூன்று நாட்கள் அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து பயணம் செய்து முகாம் அமைப்பதற்காக இடம் பார்த்தனர். கர்த்தரின் மேகமானது தினமும் அவர்களுக்கு மேல் சென்றது. ஒவ்வொரு நாள் காலையிலும் அது வழிகாட்டிய வண்ணம் சென்றது. ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நகரும்போதெல்லாம் மோசே: “கர்த்தாவே எழுந்திரும்! உமது பகைவர்கள் சிதறடிக்கப்படட்டும். உமது பகைவர்கள் உம்மைவிட்டு ஓடட்டும்” என்று சொன்னான். பரிசுத்தப் பெட்டியை அவர்கள் கீழே வைக்கும்போதெல்லாம் மோசே எப்பொழுதும்

எண்ணாகமம் 10:11-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று. இப்படியே கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள். யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான். இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான். செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான். அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான். சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான். காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான். கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள். அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான். மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான். பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான். அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான். ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான். நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான். இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள். அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம் போகிறோம்; நீயும் எங்களோடே கூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான். அப்பொழுது மோசே: நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய். நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான். அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன் சென்றது. அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம் போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது. பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான். அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.