நெகேமியா 8:1-18

நெகேமியா 8:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்ட போது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள். மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள். ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள். அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம்வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள் மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது. முதலாம் நாள்தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாணபுஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.

நெகேமியா 8:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எல்லா மக்களும் தண்ணீர் வாசலின் முன்னேயுள்ள சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். யெகோவா இஸ்ரயேலருக்கென கட்டளையிட்டிருந்த மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி சட்ட ஆசிரியர் எஸ்றாவிடம் கூறினார்கள். எனவே ஏழாம் மாதம் முதலாம் நாளில், ஆண்களும் பெண்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய எல்லோரும் கூடியிருந்த சபைக்குமுன் மோசேயின் சட்ட புத்தகத்தை ஆசாரியன் எஸ்றா கொண்டுவந்தான். எஸ்றா தண்ணீர் வாசலின் முன்னால் இருந்த சதுக்கத்தைப் பார்த்தபடி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளங்கிக்கொள்ள ஆற்றலுள்ளவர்களுக்கு, அதிகாலையிலிருந்து நண்பகல்வரை மோசேயின் சட்டப் புத்தகத்தைச் சத்தமாக வாசித்தான்; எல்லா மக்களும் அதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மரத்தாலான உயர்ந்த மேடையின்மேல் சட்ட ஆசிரியன் எஸ்றா ஏறி நின்றான். அவனருகில் வலப்பக்கத்தில் மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்கள் நின்றார்கள். இடப்பக்கத்தில் பெதாயா, மீசயேல், மல்கியா, ஆசூம், அஸ்பதனா, சகரியா, மெசுல்லாம் ஆகியோர் நின்றார்கள். எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். அவன் அவர்களைவிட உயரத்தில் நின்றபடியால், எல்லா மக்களுக்கும் அவனைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் புத்தகத்தைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்றா மேன்மையுள்ள இறைவனாகிய யெகோவாவைத் துதித்தான்; மக்கள் யாவரும் தங்கள் கைகளை உயர்த்தி, “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பின்பு அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து யெகோவாவை வழிபட்டார்கள். மக்கள் அங்கு நின்றுகொண்டிருக்கையில், லேவியர்களான யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கெலித்தா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர் அவர்களுக்கு சட்டத்திலிருந்து அறிவுறுத்தினார்கள். அவர்கள் இறைவனுடைய சட்டப் புத்தகத்தை வாசித்து அதில் உள்ளவற்றை மக்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக தெளிவுபடுத்தினார்கள். அதனால் எல்லா மக்களும் அதை விளங்கிக்கொண்டனர். எல்லா மனிதரும் இறைவனுடைய சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதார்கள். அதனால் ஆளுநரான நெகேமியாவும், ஆசாரியனும், சட்ட ஆசிரியருமான எஸ்றாவும், மக்களுக்குக் போதித்துக்கொண்டிருந்த லேவியர்களும் எல்லா மக்களிடமும், “இந்த நாள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஆகவே நீங்கள் துக்கப்படவோ, அழவோ வேண்டாம்” என்றார்கள். நெகேமியா அவர்களிடம், “நீங்கள் சிறந்த உணவைச் சாப்பிட்டு, இனிய இரசத்தைக் குடித்து மகிழ்ந்திருங்கள். தங்களுக்கென்று ஒன்றும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், அவற்றில் கொஞ்சத்தை அனுப்புங்கள். ஏனென்றால் இந்த நாள் நம்முடைய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். நீங்கள் துக்கப்படவேண்டாம், யெகோவா கொடுக்கும் மகிழ்ச்சியே உங்கள் பெலன்” என்றான். அப்படியே லேவியரும், “அமைதியாயிருங்கள், இந்நாள் பரிசுத்தமானது. துக்கமாயிருக்க வேண்டாம்” என்று சொல்லி எல்லா மக்களையும் ஆறுதல்படுத்தினார்கள். அதன்பின்பு எல்லா மக்களும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகளை நன்கு விளங்கிக்கொண்டபடியினால், தாங்கள் சாப்பிட்டுக் குடிப்பதற்கும், தேவைப்பட்டவர்களுக்கு உணவுப் பங்குகளை அனுப்புவதற்கும், சந்தோஷத்துடன் கொண்டாடுவதற்கும் போனார்கள். அதே மாதத்தின் இரண்டாம் நாளில் எல்லா குடும்பங்களிலுமுள்ள தலைவர்களும் ஆசாரியருடனும், லேவியருடனும் ஒன்றுசேர்ந்து சட்டத்தின் வார்த்தைகளைக் கவனமாய் கேட்கும்படி, சட்ட ஆசிரியர் எஸ்றாவைச் சுற்றி ஒன்றுகூடினார்கள். ஏழாம் மாதத்தின் பண்டிகையைக் கொண்டாடும்போது, இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களிலேயே வாழவேண்டும் என்று மோசேயைக் கொண்டு யெகோவா கட்டளையிட்டிருந்ததாக சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள். அத்துடன் எழுதியிருக்கிறபடி மக்கள் மலைநாட்டிற்குப் போய் ஒலிவமரம், காட்டொலிவமரம், மிருதுச்செடி, பேரீட்சைமரம், அத்திமரம் ஆகியவற்றின் மரக்கொப்புகளை எடுக்கவேண்டும் எனவும், அவற்றினால் கூடாரங்களை அமைக்கும்படி எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் எனவும் அறிந்துகொண்டார்கள். மக்கள் வெளியே போய், மரக்கொப்புகளைக் கொண்டுவந்து அவற்றினால் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள்; அவர்கள் வீட்டுக் கூரைகளின்மேலும், வீட்டு முற்றங்களிலும், இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், தண்ணீர்வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும், எப்பிராயீம் வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள். நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த மக்கள் கூட்டம் முழுவதும் கூடாரங்களைக் கட்டி அங்கே வாழ்ந்தார்கள். நூனின் மகன் யோசுவாவின் நாட்களிலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதமாகப் பண்டிகையைக் கொண்டாடவில்லை. இப்போதோ அவர்களுடைய மகிழ்ச்சி மிக அதிகமாயிருந்தது. முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை ஒவ்வொரு நாளும் இறைவனின் சட்டப் புத்தகத்திலிருந்து எஸ்றா வாசித்தான். ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். எட்டாம் நாளில் சட்ட ஒழுங்குவிதியின்படி எல்லோரும் சபைகூடினார்கள்.

நெகேமியா 8:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்கள் எல்லோரும் தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்த வெளியிலே ஒருமனப்பட்டுக் கூடி, யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தை ஆண்களும் பெண்களும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்தவெளிக்கு எதிரே காலைதுவங்கி மதியம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; எல்லா மக்களும் நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டதை கவனமாகக் கேட்டார்கள். வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனருகில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசயேலும், மல்கியாவும், ஆசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எஸ்றா எல்லா மக்களுக்கும் உயர நின்று, எல்லா மக்களும் காணப் புத்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, மக்கள் எல்லோரும் எழுந்துநின்றார்கள். அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய யெகோவா வை ஸ்தோத்தரித்தான்; மக்களெல்லோரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, யெகோவாவை தொழுதுகொண்டார்கள். யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சப்பேதாயி ஒதியா, மாசெயா, கெலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு விளங்கச்செய்தார்கள்; மக்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை விளக்கமாக வாசித்து, அர்த்தம்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கச்செய்தார்கள். மக்கள் எல்லோரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுததால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், மக்களுக்கு விளக்கிக்காட்டின லேவியர்களும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைச் சாப்பிட்டு, இனிப்பானதைக்குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்கு அவைகளை கொடுங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம்; யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். லேவியர்களும் மக்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது மக்கள் எல்லோரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்ததால், சாப்பிட்டுக் குடிக்கவும், உணவுகளை கொடுக்கவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள். மறுநாளில் மக்களின் எல்லா வம்சத்தலைவர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவிடம் கூடிவந்தார்கள். அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் மக்கள் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று யெகோவா மோசேயைக்கொண்டு கற்றுக்கொடுத்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள். ஆகையால் எழுதியிருக்கிறமுறையில் கூடாரங்களைப் போட, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரபலப்படுத்தினார்கள். அப்படியே மக்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் வளாகங்களிலும், தேவனுடைய ஆலயவளாகங்களிலும், தண்ணீர்வாசல் வெளியிலும், எப்பிராயீம்வாசல் வெளியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். இவ்விதமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார்கள் எல்லோரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்த நாள்வரை இஸ்ரவேல் மக்கள் செய்யாமலிருந்து இப்பொழுது செய்ததால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது. முதலாம் நாள்துவங்கிக் கடைசி நாள்வரை, தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளிலோ, முறையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருந்தது.

நெகேமியா 8:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர். எஸ்றா மரத்தால் ஆன மேடையின் மேல் நின்றான். அது இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது. எஸ்றாவின் வலது புறத்தில் மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், நின்றனர். அவனது இடது புறத்தில் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எனவே எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். ஜனங்கள் எல்லோரும் அவனைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் அவன் உயர்ந்த மேடையில் நின்றுக்கொண்டிருந்தான். எஸ்றா சட்ட புத்தகத்தைத் திறந்ததும் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றனர். எஸ்றா உன்னத தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். ஜனங்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அதற்கு மறுமொழியாக “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு ஜனங்கள் அனைவரும் குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரை தொழுதுகொண்டார்கள். லேவியர் கோத்திரத்திலுள்ள இம்மனிதர்கள் அங்கே நின்றுக்கொண்டிருந்த ஜனங்களிடம் சட்டத்தைப் பற்றி ஜனங்களுக்குப் புரியும்படிச் செய்தனர். அவர்கள் யெசுவா, பானி, செரேபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர்களாவார்கள். அந்த லேவியர்கள் தேவனுடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். அவர்கள் அதனைப் புரியும்படிச் செய்தனர். அதன் பொருளையும் விளக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்ததால் ஜனங்கள் வாசிக்கப்பட்டது என்னவென்று புரிந்துக்கொண்டனர். பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர். நெகேமியா, “போங்கள், நல்ல உணவையும் இனிய பானங்களையும் குடித்து மகிழுங்கள். கொஞ்சம் உணவையும் பானத்தையும் உணவு எதுவும் தயார் செய்யாத ஜனங்களுக்குக் கொடுங்கள். இன்று கர்த்தருக்கு சிறப்பிற்குரிய நாள். துக்கப்படவேண்டாம். ஏனென்றால் கர்த்தருடைய மகிழ்ச்சியானது உங்களைப் பலமுடையவர்களாகச் செய்யும்” என்றான். லேவியின் கோத்திரத்தாரும் ஜனங்கள் அமைதியடைய உதவினார்கள். அவர்கள், “அமைதியாக இருங்கள், இது சிறப்பிற்குரிய நாள், துக்கப்பட வேண்டாம்” என்றனர். பிறகு ஜனங்கள் எல்லாரும் சிறப்பான உணவை உண்ணச் சென்றனர். அவர்கள், தம் உணவையும் பானங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் சந்தோஷமாக இருந்தனர். அச்சிறப்பு நாளைக் கொண்டாடினார்கள். அவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்துக்கொண்டிருந்த கர்த்தருடைய போதனைகளை புரிந்துக்கொண்டனர். பிறகு அம்மாதத்தின் இரண்டாவது நாளில் அனைத்து குடும்பத் தலைவர்களும் போய் எஸ்றாவையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் சந்தித்தனர். அவர்கள் அனைவரும் வேதபாரகனாகிய எஸ்றாவைச் சுற்றி சட்டத்தின் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள கூடினார்கள். அவர்கள் கற்று சட்டத்தில் கட்டளைகள் இருப்பதைக் கண்டனர். கர்த்தர் இந்தக் கட்டளையை மோசே மூலம் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஆண்டின் ஏழாவது மாதத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு விஷேச விடுமுறையை (கூடாரங்கள் விழா) கொண்டாட எருசலேமிற்குப் போகவேண்டும். அவர்கள் தற்காலிகமாக கூடாரங்களில் அங்கே குடியிருக்கவேண்டும். ஜனங்கள் தங்களது சகல நகரங்களுக்கும் எருசலேமிற்கும் போய் இவற்றைக் கூறவேண்டும்: “மலை நாடுகளுக்குப் போங்கள். பலவகையாக ஒலிவ மரங்களிலிருந்து கிளைகளை எடுங்கள். மிருதுச்செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மரப்பட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள். அக்கிளைகளைக் கொண்டு தற்காலிகமாகக் கூடாரங்களை அமையுங்கள். சட்டம் சொல்லுகிறபடிச் செய்யுங்கள்.” எனவே, ஜனங்கள் வெளியே போய் அம்மரக் கிளைகளை எடுத்தனர். பிறகு அவர்கள் தற்காலிகமான கூடாரங்களைத் தங்களுக்காக அமைத்தனர். அவர்கள் தங்கள் சொந்த கூரைகள் மேலும் முற்றங்களிலும் கூடாரங்களை அமைத்துக்கொண்டனர். ஆலயப் பிரகாரங்களிலும், தண்ணீர் வாசல் அருகிலுள்ள திறந்த வெளியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். இவ்வாறு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேல் ஜனங்களின் குழு முழுவதும் கூடாரங்களைப் போட்டார்கள். அவர்கள் அமைத்த கூடாரங்களிலேயே அவர்கள் குடி இருந்தார்கள். நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள் முதல் அந்நாள்வரை இஸ்ரவேல் ஜனங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை. ஒவ்வொருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். விழாவின் ஒவ்வொரு நாளும் சட்டப் புத்தகத்தில் இருந்து எஸ்றா வாசித்தான். விழாவின் முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை எஸ்றா சட்டப் புத்தகத்தை வாசித்தான். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்விழாவை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். பிறகு எட்டாவது நாள் ஜனங்கள் முறைப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்காகக் கூடினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்