நெகேமியா 6:1-9

நெகேமியா 6:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் மதிலைத் திரும்பவும் கட்டினேன் என்றும், அதில் ஒரு இடைவெளியும் எஞ்சியிருக்கவில்லை என்றும் சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேம் ஆகியோருக்கும், எங்கள் மற்ற பகைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் அந்த வேளையில் இன்னும் வாசலின் கதவுகளை நான் பொருத்தவில்லை. சன்பல்லாத்தும், கேஷேமும், “வாரும், ஓனோ நிலத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றில் சந்திப்போம்” என்று எனக்குச் செய்தி அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் எனக்குத் தீமை செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலைத்திட்டத்தை செய்துகொண்டிருக்கிறேன். ஆகையால் நான் வரமுடியாது. நான் அந்த வேலையைவிட்டு உங்களிடம் வருவதால், என் வேலை ஏன் தடையாக வேண்டும்” என்று சொல்லி அனுப்பினேன். இதேவிதமாக நான்கு முறைகள் அவர்கள் செய்தி அனுப்பினார்கள். நானும் ஒவ்வொரு தடவையும் அதே பதிலை மீண்டும் கொடுத்தனுப்பினேன். சன்பல்லாத்து ஐந்தாம் முறையும் அதே செய்தியுடன் தன் வேலைக்காரனை என்னிடம் அனுப்பினான். அவனுடைய கையில் முத்திரையிடப்படாத கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில், “நீயும் யூதர்களும் கலகம் உண்டாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதனாலேயே நீங்கள் மதிலைக் கட்டுகிறீர்கள் என்ற செய்தி மற்ற மக்களுள் பரவுகிறது. கேசேமும் அவ்வாறே சொல்கிறான். மேலும் இந்த அறிக்கைகளின்படி நீர் அவர்களுக்கு அரசனாகப் போகிறீர். உம்மைக் குறித்து இதை பிரசித்தப்படுத்தும்படி, எருசலேமின் இறைவாக்கு உரைப்போரையும் நியமித்திருக்கிறீர். ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறார்!’ என்ற செய்தி அரசனுக்கு அறிவிக்கப்படும். ஆகையால் நீர் வாரும், நாம் ஒன்றுகூடி ஆலோசிப்போம்” என்று எழுதியிருந்தது. அதற்கு நான், “நீர் சொல்வதன்படி ஒன்றும் நடக்கவில்லை; இது உம்முடைய வெறும் கற்பனையே” என்று பதில் சொல்லி அனுப்பினேன். அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்த நினைத்திருந்தார்கள். எங்களுடைய கைகள் வேலைசெய்ய முடியாதபடி சோர்ந்து போய்விடும், ஒருநாளும் இவ்வேலை முற்றுப் பெறமாட்டாது என்று நினைத்தார்கள். ஆனாலும் நானோ, “என் கைகளைப் பலப்படுத்தும்” என்று மன்றாடினேன்.

நெகேமியா 6:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது, நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாமலிருப்பதால், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குத் தீங்கு செய்ய நினைத்தார்கள். அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரமுடியாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருவதால் இந்த வேலை நின்றுவிடும் என்று சொல்லச்சொன்னேன். அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும்.

நெகேமியா 6:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை. எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர். எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன். சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன். பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது. அக்கடிதத்தில், “ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் ராஜாவுக்கு எதிராகத்திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய ராஜா ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘யூதாவில் ஒரு ராஜா இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது. “நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா ராஜாவும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது. எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன். எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன்.

நெகேமியா 6:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்ற பகைஞரும் கேள்விப்பட்டபோது, நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப்பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள். அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன். அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீ­ரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை பண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போகும் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்