நெகேமியா 6:1-3
நெகேமியா 6:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்ற பகைஞரும் கேள்விப்பட்டபோது, நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப்பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள். அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
நெகேமியா 6:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் மதிலைத் திரும்பவும் கட்டினேன் என்றும், அதில் ஒரு இடைவெளியும் எஞ்சியிருக்கவில்லை என்றும் சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேம் ஆகியோருக்கும், எங்கள் மற்ற பகைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் அந்த வேளையில் இன்னும் வாசலின் கதவுகளை நான் பொருத்தவில்லை. சன்பல்லாத்தும், கேஷேமும், “வாரும், ஓனோ நிலத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றில் சந்திப்போம்” என்று எனக்குச் செய்தி அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் எனக்குத் தீமை செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலைத்திட்டத்தை செய்துகொண்டிருக்கிறேன். ஆகையால் நான் வரமுடியாது. நான் அந்த வேலையைவிட்டு உங்களிடம் வருவதால், என் வேலை ஏன் தடையாக வேண்டும்” என்று சொல்லி அனுப்பினேன்.
நெகேமியா 6:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது, நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாமலிருப்பதால், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குத் தீங்கு செய்ய நினைத்தார்கள். அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரமுடியாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருவதால் இந்த வேலை நின்றுவிடும் என்று சொல்லச்சொன்னேன்.
நெகேமியா 6:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை. எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர். எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.