நெகேமியா 5:14-16
நெகேமியா 5:14-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மேலும் அர்தசஷ்டா அரசனின் இருபதாம் வருட ஆட்சியில் யூதா நாட்டிற்கு நான் ஆளுநனாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, அர்தசஷ்டாவின் முப்பத்தி இரண்டாம் வருடம்வரை பன்னிரண்டு வருடங்களுக்கு நானோ, என் சகோதரர்களோ ஆளுநர்களுக்கான உணவைச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தி, அவர்களிடமிருந்து நாற்பது சேக்கல் வெள்ளிப் பணத்தையும், அத்துடன் உணவையும், திராட்சை இரசத்தையும் வாங்கிவந்தார்கள். அவர்களுடைய உதவியாளர்களும்கூட அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் நானோ இறைவனுக்குப் பயந்ததினால் அவ்விதம் நடக்கவில்லை. நான் இந்த மதில் வேலைக்கு என்னை அர்ப்பணித்திருந்தேன். எனது வேலைக்காரர்கள் எல்லோரும் அந்த வேலைக்காக அங்கு கூடியிருந்தார்கள்; நாங்கள் எந்த நிலத்தையும் எங்களுக்குச் சொந்தமாக்கவில்லை.
நெகேமியா 5:14-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் யூதா தேசத்திலே ஆளுநராக இருக்க ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்கு நியமித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருடம் முதல் அவருடைய முப்பத்திரண்டாம் வருடம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருட காலங்களாக, நானும் என்னுடைய சகோதரர்களும் ஆளுநர்கள் உணவுக்காக வாங்குகிற பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்களுக்குப் பாரமாக இருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சைரசமும் வாங்கினதும் அன்றி, நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்களுடைய வேலைக்காரர்களும் கூட மக்களின்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததால் இப்படிச் செய்யவில்லை. ஒரு வயலையாவது நாங்கள் வாங்கவில்லை; நாங்கள் அந்த மதிலின் வேலையிலே மும்முரமாக இருந்தோம்; என்னுடைய வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.
நெகேமியா 5:14-16 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஆளுநராக இருந்தவர்கள் ஜனங்களது வாழ்க்கையைக் கடினமாக்கினார்கள். அந்த ஆளுநர்கள் ஒவ்வொருவரையும் ஒரு பவுண்டு வெள்ளி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தினர். அவர்கள் ஜனங்களிடம் உணவும் திராட்சைரசமும் கொடுக்குமாறு செய்தனர். அந்த ஆளுநர்களுக்குக் கீழே இருந்த தலைவர்களும் ஜனங்களின் வாழ்க்கையை அதிகாரம் செலுத்தி மேலும் கடினமானதாகச் செய்தனர். ஆனால் நான் தேவனுக்கு பயந்து மரியாதை செலுத்தியதால் இதைப்போன்ற செயல்களைச் செய்யவில்லை. நான் எருசலேம் சுவரைக் கட்டுவதில் கடினமாக வேலை செய்தேன். எனது ஜனங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்காக அங்கே கூடினார்கள். நாங்கள் எவரிடமிருந்தும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.
நெகேமியா 5:14-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் யூதா தேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை. ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.