நெகேமியா 5:1-5
நெகேமியா 5:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது அநேகரும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் யூத சகோதரருக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பினார்கள். சிலர், “நாங்களும், எங்கள் மகன்களும், மகள்களும் அநேகராயிருக்கிறோம், நாங்கள் சாப்பிட்டு உயிருடன் வாழ்வதற்குத் தானியம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்கள். மற்றவர்களோ, “பஞ்சத்தில் தானியம் பெறுவதற்காக எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானமாக வைத்திருக்கிறோம்” என்றார்கள். வேறுசிலர், “எங்கள் வயல்களுக்கும், திராட்சைத் தோட்டங்களுக்குமான அரச வரியை செலுத்துவதற்குப் போதிய பணத்தை நாங்கள் கடனாகவே பெற்றோம். நாங்கள் எங்கள் நாட்டவரைப் போலவே ஒரே சதையும், இரத்தமும் உடையவர்களாயிருக்கிறோம்; அவர்களுடைய மகன்களைப்போலவே எங்கள் மகன்களும் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும் எங்கள் மகன்களையும், மகள்களையும் அடிமைகளாக்க வேண்டியுள்ளோம். எங்கள் மகள்களில் சிலர் அடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்; எங்கள் வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர்களின் கைவசமானபடியால், அவர்களை மீட்க எங்களால் முடியாதிருக்கிறோம்” என்றார்கள்.
நெகேமியா 5:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது. அது என்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்களுடைய மகன்களோடும், மகள்களோடும் அநேகரானதால், சாப்பிட்டுப் பிழைப்பதற்காக நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். வேறு சிலர்: எங்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். இன்னும் சிலர்: ராஜாவிற்கு வரியை செலுத்த, நாங்கள் எங்களுடைய நிலங்கள்மேலும், திராட்சைத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்; எங்களுடைய உடலும், சகோதரர்கள் உடலும் சரி; எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்களுடைய மகன்களையும், மகள்களையும் அடிமையாக்கவேண்டியதாக இருக்கிறது; அப்படியே எங்களுடைய மகள்களில் சிலர் அடிமையாகவும் இருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு வழியில்லை; எங்களுடைய நிலங்களும், திராட்சைத்தோட்டங்களும் வேறு மனிதர்கள் கைவசமானது என்றார்கள்.
நெகேமியா 5:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
ஏழை ஜனங்களுள் அநேகம் பேர் தங்கள் யூத சகோதரர்களுக்கு எதிராக முறையிடத் தொடங்கினார்கள். சிலர், “எங்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டுமானால் தானியங்களைப் பெறவேண்டும்” என்றனர். மற்ற ஜனங்கள், “இது பஞ்சகாலம், நாங்கள் எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் தானியங்களைப் பெறுவதற்காக அடமானமாக வைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும் சிலர், “நாங்கள் எங்களது வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு ராஜாவிடம் வரி கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்களால் வரிகட்ட முடியாது. எனவே நாங்கள் வரி கட்டுவதற்குப் பணத்தை கடன் வாங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த பணக்கார ஜனங்களைப் பாருங்கள். நாங்களும் அவர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் குமாரர்களும் அவர்களது குமாரர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அடிமையாக விற்கும் நிலையில் உள்ளோம். ஏற்கெனவே எங்களில் சிலர் தங்கள் குமாரத்திகளையும் அடிமைகளாக விற்றிருக்கின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்கள் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் இழந்துவிட்டோம். இப்பொழுது அவற்றை மற்றவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்” என்றனர்.
நெகேமியா 5:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்; எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.