நெகேமியா 4:1-5

நெகேமியா 4:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாங்கள் திரும்பவும் மதிலைக் கட்டத் தொடங்கியதை சன்பல்லாத் கேள்விப்பட்டபோது, கோபங்கொண்டு, கடும் சீற்றமடைந்தான். அவன் யூதரை அவமதித்து, தன்னுடைய கூட்டாளிகளுக்கும் சமாரிய இராணுவத்திற்கும் முன்பாக, “பலவீனமான இந்த யூதர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் மதிலைத் திரும்பவும் கட்டுவார்களோ? அவர்கள் பலிகளைச் செலுத்துவார்களோ? ஒரே நாளில் முடித்து விடுவார்களோ? இடிபாட்டுக் குவியல்களில் கருகிப்போன கற்களைத் திரும்பவும் உயிர்ப்பிப்பார்களோ?” என்றான். சன்பல்லாத்தின் அருகே நின்ற அம்மோனியனான தொபியா, “அவர்கள் என்ன கட்டுகிறார்கள்? அதற்கு மேலாக ஒரு நரி ஏறினாலும்கூட அவர்களின் கல்மதில் உடைந்துவிடும்” என்று கூறினான். எங்கள் இறைவனே, எங்களுக்குச் செவிகொடும்; ஏனெனில் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம். அவர்களின் ஏளனங்களை அவர்கள் தலைமீதே திருப்பிவிடும். அவர்களை சிறைப்பிடிக்கும் ஒரு நாட்டுக்குக் கொள்ளைப்பொருளாக ஒப்புக்கொடும். அவர்களுடைய குற்றத்தை மூடாதிரும்; உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றி விடாதிரும்; ஏனெனில் கட்டுபவர்களை முகத்துக்கு முன்பாகவே மனவேதனை உண்டாகும்படி செய்தார்களே.

நெகேமியா 4:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து: அந்த அற்பமான யூதர்கள் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளில் முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியாவின் படைக்கும் முன்பாகச் சொன்னான். அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான். எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும். அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.

நெகேமியா 4:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் எருசலேம் சுவர்களைக் கட்டிக்கொண்டிருப்பதை சன்பல்லாத் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபம்கொண்டான், எரிச்சல் அடைந்தான். அவன் யூதர்களைக் கேலிச்செய்யத் தொடங்கினான். சன்பல்லாத் அவனது நண்பர்களோடும் சமாரியாவிலுள்ள படைவீரர்களோடும் பேசி, “பலவீனமுள்ள இந்த யூதர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை தனியாக விடுவோம் என்று நினைக்கிறார்களா? அவர்கள் பலியிடலாம் என்று நினைக்கிறார்களா? ஒரே ஒரு நாளிலேயே கட்டி முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? சாம்பல் மேடுகளிலும் புழுதிமேடுகளிலும் உள்ள கற்களுக்கு உயிர்கொடுக்க அவர்களால் முடியாது. இவை சாம்பல் மற்றும் புழுதிக் குவியல்களே” என்றான். அம்மோனியனாகிய தொபியா சன்பல்லாத்தின் பக்கத்தில் நின்றான். அவன், “இந்த யூதர்கள் எதைக் கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிறு நரி இதன் மேல் ஏறினாலும் சுவரிலுள்ள கற்கள் கீழே விழுந்துவிடும்” என்று சொன்னான். நெகேமியா தேவனிடம் ஜெபம் செய்தான். அவன், “எங்கள் தேவனே, எங்கள் ஜெபத்தைக் கேளும். அந்த மனிதர்கள் எங்களை வெறுக்கிறார்கள். சன்பல்லாத்தும் தொபியாவும் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்களுக்கே அந்தத் தீயச்செயல்கள் ஏற்படும்படி செய்யும். அவர்களை கைதிகளாக கொண்டு போகப்பட்டவர்களைப் போல வெட்கமுறும்படிச் செய்யும். அவர்களது குற்றங்களை அகற்றவேண்டாம், அல்லது உமது கண்ணுக்கு முன்னால் செய்திருக்கிற பாவங்களை மன்னிக்கவேண்டாம். அவர்கள் கட்டிடம் கட்டுவோர்களை நிந்தனை செய்தும் அதைரியப்படுத்தவும் செய்தனர்” என்றான்.

நெகேமியா 4:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான். எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும். அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.