நெகேமியா 3:1-5

நெகேமியா 3:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரதான ஆசாரியன் எலியாசீபும், அவனுடைய உடன் ஆசாரியரும் மதிலில் வேலைசெய்வதற்காகப் போய் செம்மறியாட்டு வாசலைத் திரும்பவும் கட்டினார்கள். அவர்கள் அதை அர்ப்பணம் செய்து, அதன் கதவுகளை அதற்குரிய இடத்தில் அமைத்தார்கள். அவர்கள் மதிலை நூறுபேரின் கோபுரம்வரை கட்டி, அதை அர்ப்பணம் செய்தார்கள்; தொடர்ந்து அனானயேலின் கோபுரம்வரையிலும் கட்டினார்கள். அதை அண்டியுள்ள பகுதியை எரிகோவின் மனிதர் கட்டினார்கள். அதை அடுத்துள்ள பகுதியை இம்ரியின் மகன் சக்கூர் கட்டினான். மீன்வாசல் அசெனாவின் மகன்களால் திரும்பக் கட்டப்பட்டது. மரத்தாலான உத்திரங்களைப் போட்டு, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும், அந்தந்த இடங்களில் வைத்தார்கள். அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத் அதற்கடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்தாக மெஷேசாபேலின் மகனான பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்தான்; அவனுக்கு அடுத்தாக பானாவின் மகன் சாதோக் பழுதுபார்த்தான். அடுத்துள்ள பகுதி தெக்கோவா மனிதர்களால் பழுதுபார்க்கப்பட்டது; ஆனால் அவர்களுடைய உயர்குடி மக்கள் அவர்களுடைய மேற்பார்வையாளர்களின்கீழ் வேலைசெய்ய தோள்கொடுத்து உதவவில்லை.

நெகேமியா 3:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள். அவன் அருகே எரிகோவின் மனிதர்கள் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் மகனாகிய சக்கூர் கட்டினான். மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். அவர்கள் அருகே கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகில் மெஷேசாபெயேலின் மகனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் மகனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான். அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய பங்கை செய்யவில்லை.

நெகேமியா 3:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

தலைமை ஆசாரியரின் பெயர் எலியாசீப். எலியாசீபும் அவனது சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்துப் போய் ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அவர்கள் ஜெபம் செய்து அந்த வாசலைக் கர்த்தருக்குரிய பரிசுத்தமானதாக ஆக்கினார்கள். அவர்கள் சுவரில் கதவுகளை வைத்தனர். அந்த ஆசாரியர்கள் எருசலேமின் சுவரில் நூறு என்னும் கோபுரம்வரையும் அனனெயேலின் கோபுரம்வரையும் வேலை செய்தனர். அவர்கள் ஜெபம் செய்து தங்கள் வேலையைக் கர்த்தருக்குரிய பரிசுத்தமானதாக ஆக்கினார்கள். எரிகோவிலிருந்து வந்த மனிதர்கள் ஆசாரியர்களுக்கு அருகில் சுவர்கள் கட்டினார்கள். இம்ரியின் குமாரனாகிய சக்கூர் எரிகோவின் மனிதர்களுக்கு அருகில் கட்டினான். செனாவின் குமாரர்கள் மீன்வாசலைக் கட்டினார்கள். சரியான இடத்தில் உத்திரம் வைத்தனர். அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு கதவுகளை வைத்தனர். பிறகு அந்த கதவிற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். உரியாவின் குமாரனான மெரெமோத் சுவரின் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். (கோசின் குமாரன் உரியா.) பெரகியாவின் குமாரனான மெசுல்லாம் அதற்கு அடுத்த சுவரைப் பழுதுபார்த்து கட்டினான் (மெஷேசாபெயேலின் குமாரன் பெரகியா.) பானாவின் குமாரனாகிய சாதோக் அருகிலுள்ள சுவரைப் பழுதுபார்த்து கட்டினான். தெக்கோவா ஊரார் அவர்கள் அருகே பழுதுபார்த்து கட்டினார்கள். ஆனால் அவர்களது தலைவர்களோ அவர்களின் ஆளுநரான நெகேமியாவிற்கு வேலை செய்ய மறுத்துவிட்டனர்.

நெகேமியா 3:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள். அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான். மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான். அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.