நெகேமியா 2:1-12
நெகேமியா 2:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அர்தசஷ்டா அரசனின் ஆட்சியின் இருபதாம் வருடம் நிசான் மாதத்தில் அரசனுக்குத் திராட்சை இரசம் கொண்டுவரப்பட்டபோது, நான் அந்த திராட்சை இரசத்தை எடுத்து அரசனுக்குக் கொடுத்தேன். முன்னொருபோதும் நான் அவர்முன் துக்கமாயிருந்ததில்லை. எனவே அரசன் என்னிடம், “நீ வியாதி இல்லாமல் இருக்கும்போது ஏன் உனது முகம் துக்கமாய் காணப்படுகிறது? இது மனதின் துக்கமே தவிர வேறு எதுவும் இல்லை” என்றான். அப்பொழுது நான் பயமடைந்து, அரசனிடம், “அரசர் என்றைக்கும் வாழ்வாராக! எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் அழிக்கப்பட்டனவாய் கிடக்கும்போது, எனது முகம் துக்கமுடையதாய் காணப்படாதோ?” என்று கேட்டேன். அதற்கு அரசன், “அப்படியானால், உனக்கு வேண்டியது என்ன?” என்று கேட்டான். அப்பொழுது நான் பரலோகத்தின் இறைவனை நோக்கி மன்றாடினேன், பின் நான் அரசனைப் பார்த்து, “அரசர் விரும்பினால், உமது அடியவனுக்கு உமது கண்களில் தயவு கிடைக்குமானால், எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட யூதாவிலுள்ள அந்த நகரத்தைத் திரும்பவும் கட்டுவதற்கு அரசர் என்னை அனுப்பவேண்டும்” என்று பதிலளித்தேன். அந்த நேரத்தில் அரசனின் பக்கத்தில் அரசியும் அமர்ந்திருந்தாள்; அப்போது அரசன் என்னிடம், “உனது பிரயாணம் எவ்வளவு காலம் எடுக்கும்? எப்போது திரும்புவாய்?” என்று கேட்டான். என்னை அனுப்புவதற்கு அரசனுக்கு விருப்பமிருந்ததினால் நான் இவ்வளவு காலமாகுமென்று ஒரு நேரத்தைக் குறித்தேன். மேலும் நான் அரசனிடம், “அரசர் விரும்பினால் ஐபிராத்து நதிக்கு மறுகரையிலுள்ள யூதாவுக்கு நான் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி ஆளுநர்களுக்குக் கடிதங்கள் தாரும். அதைவிட ஆலயத்தின் அருகேயுள்ள கோட்டையின் வாசல் கதவுகளுக்கு மரச்சட்டங்கள் செய்வதற்கும், நகர மதிலுக்கும், நான் வசிக்கப்போகும் வீட்டுக்கும் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி அரசனுடைய காடுகளைப் பராமரிப்பவனான ஆசாபுக்கும் ஒரு கடிதம் தாரும்” என்று கேட்டேன். இறைவனின் கிருபையுள்ள கரம் என்மேல் இருந்ததினால், நான் கேட்டபடியே அரசன் என் வேண்டுகோளை எனக்குக் கொடுத்தான். அப்படியே நான் ஐபிராத்து நதியின் மறுபுறமாய் உள்ள மாகாணங்களுக்குப் போனபோது, அங்கிருந்த ஆளுநர்களிடம் அரசனின் கடிதங்களைக் கொடுத்தேன். அரசன் இராணுவ அதிகாரிகளையும், குதிரைப் படைகளையும் எனது பாதுகாப்புக்காக என்னுடன் அனுப்பியிருந்தான். ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அதிகாரியான தொபியாவும் இதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரயேலரின் நலனை மேம்படுத்துவதற்காக ஒருவன் முன்வந்ததைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தார்கள். எருசலேமுக்கு நான் போய், அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். அதன்பின்பு ஒருசில மனிதர்களுடன் இரவுவேளையில் மதிலைப் பார்வையிட நான் சென்றேன். ஆனால் என் இறைவன் எருசலேமுக்காகச் செய்யும்படி எனது இருதயத்தில் தூண்டிய எதையும் நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மிருகமும் அங்கு இருக்கவில்லை.
நெகேமியா 2:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருட ஆட்சியின் நிசான் மாதத்திலே, திராட்சைரசம் ராஜாவிற்கு முன்பாக வைத்திருக்கும்போது, நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன்பு ஒருபோதும் அவருக்கு முன்பாக துக்கமாக இருந்ததில்லை. அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாக இருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து, ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் இடமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இல்லாமல் இருப்பது எப்படி என்றேன். அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்செய்து, ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்து, அடியேனுக்கு உமது முன்னிலையில் தயவு கிடைத்ததானால், என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் பட்டணத்தைக் கட்டுவதற்கு, யூதா தேசத்திற்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். அப்பொழுது ராணியும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன்னுடைய பிரயாணத்திற்கு எத்தனை நாட்கள் ஆகும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுநாட்கள் ஆகுமென்று நான் ராஜாவிற்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்கு விருப்பமானது. பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்தால், நான் யூதா தேசத்திற்குப்போய்ச் சேரும்வரை, நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்கள் நான் போக அனுமதியளிக்கவும் அவர்களுக்கு நான் கடிதங்கள் கொடுப்பதற்காகவும், தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். அப்படியே நான் நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்களிடத்திற்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடு இராணுவ அதிகாரிகளையும், குதிரைவீரர்களையும் அனுப்பியிருந்தார். இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது. நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு, நான் சில மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் எழுந்து நகரத்தைச் சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமிற்காகச் செய்யவேண்டிய காரியத்தை என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகத்தைத் தவிர வேறொரு மிருகமும் என்னுடன் இருந்ததில்லை.
நெகேமியா 2:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் ஆட்சியாண்டில், நிசான் மாதத்தில் கொஞ்சம் திராட்சைரசம் ராஜாவுக்கு கொண்டுவரப்பட்டது. நான் திராட்சைரசத்தை எடுத்து ராஜாவுக்கு கொடுத்தேன். நான் ராஜாவோடு இருக்கும்போது எப்பொழுதும் துக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது நான் துக்கமாய் இருந்தேன். எனவே ராஜா என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான். பிறகு நான் மிகவும் பயந்தேன். பயந்தாலும் கூட நான் ராஜாவிடம், “ராஜா என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன். பிறகு ராஜா என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான். நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு நான் ராஜாவுக்கு, “இது ராஜாவுக்கு பிடித்தமானதாக இருந்தால், நான் உமக்கு நல்லவனாக இருந்திருந்தால், தயவுசெய்து எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதாவிற்கு என்னை அனுப்பும். யூதாவில் நான் போய் எருசலேம் நகரத்தை மீண்டும் கட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னேன். இராணி ராஜாவுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். ராஜா என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான். ராஜா என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன். நான் ராஜாவிடம், “ராஜாவுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன். ராஜா எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், ராஜா இவற்றைச் செய்தான். எனவே, நான் ஐபிராத்து நதியின் மேற்குப் பகுதியின் ஆளுநர்களிடம் சென்றேன். ராஜாவிடமிருந்து பெற்ற கடிதங்களை ஆளுநர்களிடம் கொடுத்தேன். ராஜா என்னுடன் படை அதிகாரிகளையும் குதிரை வீரர்களையும் அனுப்பியிருந்தான். நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்பது பற்றி சன்பல்லாத்தும் தொபியாவும் கேள்விப்பட்டனர். அவர்கள் இடிந்து போனார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவ ஒருவன் வந்திருக்கிறான் என்று அறிந்து கோபமுற்றனர். சன்பல்லாத் ஓரோனியனிலிருந்தும் தொபியா அம்மோனியாவிலிருந்தும் வந்த அதிகாரிகள். நான் எருசலேமிற்குப் போனேன். நான் அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். பிறகு இரவில் நான் சில மனிதர்களோடு புறப்பட்டேன். எருசலேமிற்காக என்ன செய்யவேண்டும் என்று தேவன் என் இதயத்தில் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நான் எவரிடமும் சொல்லியிருக்கவில்லை. நான் சவாரி செய்து வந்த குதிரையைத் தவிர வேறு குதிரைகள் என்னிடம் இல்லை.
நெகேமியா 2:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து, ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன். அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். அப்பொழுது ராஜஸ்திரீயும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று. பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதா தேசத்துக்குப்போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும், தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ளகரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார். இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது. நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு, நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.