நெகேமியா 1:1-11
நெகேமியா 1:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அகலியாவின் மகன் நெகேமியாவின் வார்த்தைகள்: அர்தசஷ்டா அரசாண்ட இருபதாம் வருடம், கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் அரண்மனையில் இருந்தேன். அப்பொழுது எனது சகோதரருள் ஒருவனான ஆனானி யூதாவிலிருந்து வேறுசில மனிதருடன் வந்தான்; நான் அவர்களிடம், நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருக்கும் யூதரைப் பற்றியும், எருசலேமைப் பற்றியும் விசாரித்தேன். அவர்கள் என்னிடம், “நாடுகடத்தப்பட்டு மாகாணங்களுக்குத் திரும்பிவந்திருப்பவர்கள் மிகுந்த கஷ்டத்துடனும், அவமானத்துடனும் வாழ்கிறார்கள். எருசலேமின் மதிலும் உடைக்கப்பட்டிருக்கிறது; அதன் வாசல் கதவுகளும் எரிக்கப்பட்டுள்ளன” என்றார்கள். இவற்றைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுதேன். சிலநாட்கள் நான் பரலோகத்தின் இறைவனுக்கு முன்பாகத் துக்கப்பட்டு உபவாசித்து மன்றாடினேன். பின்பு நான், “யெகோவாவே, பரலோகத்தின் இறைவனே, மகத்துவமுள்ளவரும் பயபக்திக்குரிய இறைவனே, உம்மில் அன்பாய் இருந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே, உமது அடியவர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக நான் உமக்கு முன்பாக இரவும் பகலும் மன்றாடுகிறேன். நானும் என் முற்பிதாக்களின் குடும்பமுமான இஸ்ரயேலராகிய நாங்கள் உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகிற உமது அடியவனான என் மன்றாட்டைக் கேட்க, உமது செவி கேட்டும், உமது கண்கள் திறந்தும் இருப்பதாக. உமக்கு முன்பாக நாங்கள் மிகவும் கொடியவர்களாய் நடந்தோம். நீர் உமது அடியவன் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படியவில்லை. “நீர் உமது அடியவனான மோசேக்குக் கொடுத்த வார்த்தைகளை நினைவில்கொள்ளும். நீர் மோசேயிடம், ‘நீங்கள் உண்மையற்றவர்களாயிருந்தால் பிற நாட்டு மக்களுக்குள்ளே நான் உங்களைச் சிதறடிப்பேன். ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பிவந்து என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் மக்களில் நாடு கடத்தப்பட்டவர்கள் அடிவானத்தின் தொலைதூரத்தில் இருந்தாலும்கூட, நான் அங்கிருந்தும் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கூட்டிச்சேர்த்து என்னுடைய பெயருக்கென இருப்பிடமாக நான் தெரிந்துகொண்ட இவ்விடத்திற்குக் கொண்டுவருவேன்’ என்றீரே. “அவர்கள் உம்முடைய அடியவர்களும் உமது மக்களும், உமது மிகுந்த வல்லமையினாலும் பலத்த கரத்தினாலும் நீர் மீட்டுக்கொண்டவர்களும் ஆவர். யெகோவாவே, உமது அடியவனின் ஜெபத்தையும், உமது பெயரில் பயபக்தியாய் இருப்பதில் மகிழ்ச்சியடையும் உமது அடியார்களின் மன்றாட்டையும் செவிகொடுத்துக் கேளும்; இந்த மனிதனின் முன் எனக்கு தயவு கிடைக்கப்பண்ணி இன்று எனக்கு வெற்றியைத் தாரும்” என்று மன்றாடினேன். அந்நாட்களில் நான் அரசனுக்கு திராட்சை இரசம் பரிமாறுகிறவனாயிருந்தேன்.
நெகேமியா 1:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அகலியாவின் மகனாகிய நெகேமியாவின் செயல்பாடுகள்: இருபதாம் வருடம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், என்னுடைய சகோதரர்களில் ஒருவனாகிய அனானியும், வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பிலிருந்து தப்பின யூதர்களின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீதியாக இருக்கிறவர்கள் அந்த தேசத்திலே கொடிய தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் மதில் இடிக்கப்பட்டும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாட்களாகத் துக்கப்பட்டு, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தா யெகோவாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாக நடந்தோம்; நீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாமற்போனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை தேசங்களுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே சிதறுண்டுபோனவர்கள் வானத்தின் கடைசி முனையில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என்னுடைய நாமம் விளங்குவதற்காக நான் தெரிந்துகொண்ட இடத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே. ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.
நெகேமியா 1:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
இவைகள் நெகேமியாவின் வார்த்தைகள். நெகேமியா அகலியாவின் குமாரன். நெகேமியாவாகிய நான் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் தலைநகரத்தில் இருந்தேன். இது அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாவது ஆண்டு. நான் சூசானில் இருந்தபோது என் சகோதரர்களில் ஒருவனான ஆனானியும் வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தனர். நான் அவர்களிடம் அங்கு வாழும் யூதர்களைப் பற்றிக் கேட்டேன். அந்த யூதர்கள் சிறைவாசத்திலிருந்து தப்பித்து இன்னும் யூதாவில் வாழ்ந்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் எருசலேம் நகரத்தைப்பற்றியும் விசாரித்தேன். ஆனானியும் அவனோடு இருந்த மனிதர்களும், “நெகேமியா, சிறைவாசத்திலிருந்து தப்புவித்து யூதா நாட்டில் வாழ்கிற யூதர்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கின்றனர். அந்த ஜனங்கள் மிகுந்த தொல்லைகளிலும் அவமானத்திலும் இருக்கின்றனர். ஏனென்றால் எருசலேமின் சுவர் உடைந்து விழுந்தது. அதன் வாசல்கள் நெருப்பால் எரிந்தன” என்றனர். நான் எருசலேம் ஜனங்களைப் பற்றியும் அதன் சுவரைப் பற்றியும் கேள்விப்பட்டதும் கவலை அடைந்தேன். நான் உட்கார்ந்து கதறினேன். நான் பல நாள் துக்கமாக இருந்தேன். உண்ணாமல் இருந்து பரலோகத்தின் தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு இந்த ஜெபத்தை ஜெபித்தேன்: “பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, நீரே உயர்ந்தவர், வல்லமையுள்ள தேவன். உம்மை நேசித்து உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஜனங்களோடு தான் செய்துகொண்ட அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றும் தேவன் நீரே. “உமக்கு முன்னால் இரவும் பகலும் ஜெபம் செய்துக்கொண்டிருக்கிற உமது அடியானின் ஜெபத்தைக் கேட்கும்படி தயவுசெய்து உமது கண்களையும் காதுகளையும் திறவும். நான் இஸ்ரவேல் ஜனங்களான உமது அடியார்களுக்காக ஜெபம் செய்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகின்றேன். நான் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறேன் என்றும் என் தந்தையின் வீட்டார் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள் என்றும் நான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு மிகவும் தீயவர்களாக இருந்தோம். நீர் உமது அடியாரான மோசேக்குக் கொடுத்த கட்டளைகள், போதனைகள், சட்டங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் அடி பணிந்திருக்கவில்லை. “உமது அடியாரான மோசேக்கு, நீர் கொடுத்த கட்டளையை தயவுசெய்து நினைவுக்கூரும். நீர் அவனிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால் நான் உங்களைப் பலவந்தமாக மற்ற நாடுகளுக்குள் சிதறடிப்பேன். நீங்கள் என்னிடம் திரும்பிவந்து எனது கட்டளைகளுக்கு அடிபணிவீர்களானால் பிறகு நான் சொல்லுகிற இது நடக்கும். ஜனங்கள் தம் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியே அனுப்பப்பட்டு பூமியின் கடைசி எல்லைகளில் இருந்தாலும் அங்கிருந்து அவர்களை நான் ஒன்றுசேர்ப்பேன். எனது நாமத்தை விளங்கும்படி நான் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நான் அவர்களைத் திரும்பக்கொண்டுவருவேன்’ என்று கூறினீர். “இஸ்ரவேலின் ஜனங்கள் உமது அடியவர்களாகவும் ஜனங்களாகவும் இருக்கின்றனர். நீர் உமது வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும் அந்த ஜனங்களை மீட்டீர். எனவே கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது அடியான். உமது நாமத்தில் மரியாதை வைத்திருக்கிற உமது அடியார்களின் ஜெபங்களைக்கேளும். கர்த்தாவே, நான் ராஜாவின் திராட்சைரசப் பணியாள் என்பது உமக்குத் தெரியும். எனவே இன்று எனக்கு உதவும். ராஜாவிடத்தில் உதவி கேட்கிறபோது நீர் எனக்கு உதவும். என் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணும்.”
நெகேமியா 1:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே. ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.