நாகூம் 3:8-19

நாகூம் 3:8-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும், நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும், நினிவேயே நீ சிறந்தவளோ? நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும், தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன. அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன. பூத்தும் லிபியாவும் அவளுக்கு நட்பு நாடுகளாயிருந்தன. ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டாள். அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும், அடித்து நொறுக்கப்பட்டார்கள். அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன. அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள். நினிவே பட்டணமே! நீயும் வெறிகொள்வாய். நீ ஒரு ஒளிவிடத்திற்குப் போவாய். பகைவரிடமிருந்து தப்ப புகலிடம் தேடுவாய். உன் அரண்களெல்லாம் முதல் பழுத்த பழங்களுடைய அத்திமரங்களைப் போலிருக்கும். அவை உலுக்கப்பட்டபோது அவற்றின் பழங்கள் அவற்றைத் தின்கிறவனின் வாயிலே விழும். உன் இராணுவ வீரர்களைப் பார்! அவர்கள் பெண்களைப் போலிருக்கிறார்கள். உன் நாட்டின் வாசல்கள் உன் பகைவர்களுக்கு முன்பாக விரிவாய்த் திறக்கப்பட்டிருக்கின்றன; வாயில் தாழ்ப்பாள்களை நெருப்பு சுட்டெரித்தது. முற்றுகைக் காலத்துக்கென தண்ணீரை அள்ளி வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் அரண்களைப் பலப்படுத்துங்கள்; களிமண்ணில் வேலைசெய்து சாந்தைக் குழைத்து செங்கல் சுவரைப் பழுது பாருங்கள். ஆயினும் நெருப்பு உங்களைச் சுட்டெரிக்கும்; வாள் உங்களை வெட்டி வீழ்த்தும். அது உங்களை வெட்டுக்கிளிகளைப்போல் தின்னும். பச்சைக்கிளிகளைப்போல் பெருகுங்கள், வெட்டுக்கிளிகளைப்போல் பெருகுங்கள்! உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய், ஆனால் அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் நாட்டை வெறுமையாக்கி விட்டு, பறந்து போய்விடுகிறார்கள். உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள். சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன. ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள். அசீரிய அரசனே, உனது ஆளுநர்கள் உறங்குகிறார்கள். உனது உயர்குடி மக்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள். உனது மக்கள் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை. உன் காயத்தை எதனாலும் குணமாக்க முடியாது; உனது காயம் மரணத்திற்கு ஏதுவானது. உன்னைக் குறித்த செய்தியைக் கேட்கிறவர்கள் எல்லோரும், உன் வீழ்ச்சியைப் பார்த்து கைத்தட்டுகிறார்கள். ஏனெனில் உன் முடிவற்ற கொடுமையை அறியாதவன் யார்?

நாகூம் 3:8-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன. எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது. ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள். நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய். உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும். இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும். முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து. அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள். உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும். உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது?

நாகூம் 3:8-19 பரிசுத்த பைபிள் (TAERV)

நினிவே, நீ நல்ல ஆற்றங்கரையிலுள்ள தீப்ஸ்ஸைவிடச் சிறந்ததா? இல்லை! தீப்ஸும் தன்னைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. தீப்ஸ் தன்னைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை பயன்படுத்துகிறது. அவள் தண்ணீரைச் சுவரைப்போன்று பயன்படுத்துகிறாள். எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின. ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள். எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய். ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன. நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது. நீங்கள் தண்ணீரை உங்களது நகருக்குள் சேமியுங்கள். ஏனென்றால், பகைவீரர்கள் உங்கள் நகரை முற்றுகையிடுவார்கள். அவர்கள் எவரையும் தண்ணீரும் உணவும் நகருக்குள் கொண்டுசெல்ல விடமாட்டார்கள். நீங்கள் உங்களது அரண்களைப் பலப்படுத்துங்கள். அதிகமான செங்கல்களைச் செய்ய களி மண்ணைக் கொண்டு வாருங்கள். சாந்தைக் கலந்து செங்கல்களுக்கு உருவம் அளிக்கும் பொருளை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும். நினவே, நீ மேலும், மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய். உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும் போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள். உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே. அசீரியாவின் ராஜாவே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை. நினிவே நீ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய். உன் காயத்தை எவராலும் குணப்படுத்த முடியாது. உனது அழிவைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவரும் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உன்னால் எப்பொழுதும் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள்.

நாகூம் 3:8-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது. எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது. ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள். நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய். உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும். இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும். முற்றிகைக்குத் தண்ணீர் மொண்டு வை. உன் அரண்களைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையைக் கெட்டிப்படுத்து. அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப்பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள். உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும். உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தள கர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியானநாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் பேரிலேதான் பாயாமற்போயிற்று?