நாகூம் 2:1-10

நாகூம் 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து. வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார். அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜூவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும். அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோகும். அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது. அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.

நாகூம் 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்; கோட்டையைக் காவல் செய், வீதியை கண்காணி, உன்னைத் திடப்படுத்திக்கொள், உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு. அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும், யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை, யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார். நினிவேயைத் தாக்குகிற இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன. போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள். தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது. தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன. தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன. அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன, அவை மின்னலைப்போல் பறக்கின்றன. நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள். அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள். பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது. இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது. பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து, புறாக்களைப்போல் புலம்புகிறார்கள். நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. “நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை. வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்; அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக் குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள். நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது! உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன, எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன.

நாகூம் 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து. வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார். அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும். அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும். அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது. அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது.

நாகூம் 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான். எனவே உன் நகரத்தின் வலிமையான பகுதிகளைக் காவல் செய். சாலைகளைக் காவல் காத்திடு. போருக்குத் தயாராக இரு. யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய். ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார். இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும். பகைவன் அவற்றை அழித்தான். அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான். அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது. அவர்களின் சீருடைகள் பிரகாசமான சிவப்பாக உள்ளது. அவர்களின் இரதங்கள் போருக்கு வரிசையாக உள்ளன, நெருப்பின் ஜூவாலையைப் போன்று மின்னுகின்றன. அவர்களின் குதிரைகள் போவதற்கு தயாராக உள்ளன. அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன. தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன. அவை எரியும் பந்தங்களைப் போன்றும், அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன. விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான். ஆனால் அவர்கள் மதிற்சுவரை நோக்கி ஓடி, அங்குள்ள சுவர்களைத் தகர்க்கும் கருவியின்மேல் அவர்களின் கேடயத்தை நிறுவுகிறார்கள். ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன. எதிரிகள் அவ்வழியாக வந்து ராஜாவின் வீட்டை அழிக்கிறார்கள். பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள். அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள். அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள். நினிவே, தண்ணீர் வற்றிப்போன குளத்தைப்போன்று இருக்கிறது. ஜனங்கள், “நிறுத்துங்கள்! ஓடுவதை நிறுத்துங்கள்!” என்று சொன்னார்கள். ஆனால் அது பயன் தரவில்லை. நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்! தங்கத்தை எடுங்கள்! அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது. எல்லாம் திருடப்பட்டன. நகரம் அழிக்கப்பட்டது. ஜனங்கள் தங்கள் தைரியத்தை இழந்தனர். அவர்களது இதயங்கள் அச்சத்தால் உருகின. அவர்களது முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன, அவர்களது உடல்கள் நடுங்குகின்றன, முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.