மாற்கு 9:4-50
மாற்கு 9:4-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.” திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவிடம், “முதலாவது எலியா வரவேண்டும் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே; அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார். அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான். அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான். அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது. இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான். “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான். அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார். உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான். மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான். ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான். பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார். ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள். அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள். இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார். இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார். அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான். இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான். ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார். யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. நரகத்தில், “ ‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’ ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள். “உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.
மாற்கு 9:4-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார். மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள். அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான். அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது; இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான். அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான். இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார். பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.
மாற்கு 9:4-50 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே. பேதுரு இயேசுவிடம், “போதகரே நாம் இங்கே இருப்பது நல்லதாயிற்று. நாங்கள் கூடாரங்கள் அமைக்கப் போகிறோம். ஒன்று உமக்கு, மற்றொன்று மோசேக்கு, இன்னொன்று எலியாவுக்கு” என்றான். பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர். பிறகு ஒரு மேகம் வந்து அவர்களை மறைத்தது. அந்த மேகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அது, “இவர் என் குமாரன். நான் இவரிடம் அன்பாய் இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்டியுங்கள்” என்று சொன்னது. பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை. இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார். ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர். சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர். “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார். பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர். இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன். அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார். ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று. இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார். அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான். இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார். அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான். எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார். அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார். இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர். இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார். பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர். இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர். ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார். பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார். பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான். இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான். “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள். “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
மாற்கு 9:4-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார். ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள். அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். ஏனெனில் மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களா யிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.