மாற்கு 9:30-37

மாற்கு 9:30-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். ஏனெனில் மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

மாற்கு 9:30-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார். ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள். அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள். இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார். இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.

மாற்கு 9:30-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

மாற்கு 9:30-37 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர். இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர். ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார். பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.