மாற்கு 9:14-24

மாற்கு 9:14-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான். அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான். அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது. இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான். “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான். அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார். உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.

மாற்கு 9:14-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார். மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள். அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான். அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது; இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்.

மாற்கு 9:14-24 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர். இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன். அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார். ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று. இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார். அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான். இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார். அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.

மாற்கு 9:14-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார். ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள். அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.