மாற்கு 8:13-21

மாற்கு 8:13-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு இயேசு அவர்களைவிட்டுத் திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது. இயேசு அவர்களிடம், “கவனமாய் இருங்கள். புளிப்பூட்டும் பொருளாகிய பரிசேயர், ஏரோதியரைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார். அதற்கு சீடர்கள், “தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்தே இப்படிச் சொல்லுகிறார்” என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னும் காணாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறீர்களா? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள். “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “ஏழு” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?” என்றார்.

மாற்கு 8:13-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார். சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது. அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார். அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா? உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.

மாற்கு 8:13-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார். அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள். அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார். இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர். இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே! உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார். அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள். மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார்.

மாற்கு 8:13-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். நான் ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்