மாற்கு 7:8-13
மாற்கு 7:8-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, மனிதரின் பாரம்பரிய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக, இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள். ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தனது தகப்பனையோ தாயையோ சபித்தால் அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள். அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்விதமாய், நீங்கள் கைக்கொண்டுவரும் பாரம்பரிய முறையினால், இறைவனுடைய வார்த்தையை செல்லாததாக்குகிறீர்கள். அத்துடன், நீங்கள் இவ்விதமான பல காரியங்களையும் செய்கிறீர்கள்” என்றார்.
மாற்கு 7:8-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது. எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்; நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
மாற்கு 7:8-13 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார். மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’ என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’ என்று கூறி இருக்கிறான். ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.
மாற்கு 7:8-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேகக் காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.