மாற்கு 7:14-23
மாற்கு 7:14-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மேலும், இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுத்து, இதை விளங்கிக்கொள்ளுங்கள். மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும், அவனுக்குள்ளே போவதினால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால், மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறவைகளே, அவனை அசுத்தப்படுத்துகின்றன. கேட்கிறதற்குக் காதுகளுள்ளவன் கேட்கட்டும்” என்று கூறினார். பின் மக்கள் கூட்டத்தைவிட்டு, அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்ன? என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்களோ? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகிறவை, அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏனெனில், அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல், அவனுடைய வயிற்றுக்குள் போய், அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது” என்றார். இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களும் சுத்தமானது என்று அறிவித்தார். இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’ ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை, விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன; தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார்.
மாற்கு 7:14-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும். மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
மாற்கு 7:14-23 பரிசுத்த பைபிள் (TAERV)
மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார். பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.) மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.
மாற்கு 7:14-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும், கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.