மாற்கு 7:1-4

மாற்கு 7:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலரும் எருசலேமிலிருந்து ஒன்றாய் வந்து, இயேசுவைச் சுற்றி நின்றார்கள். இயேசுவின் சீடர்களில் சிலர் முறைப்படி கை கழுவாமல், அசுத்தமான கைகளினால் உணவு சாப்பிடுவதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், யூதர் எல்லோரும் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி, கைகளைக் கழுவினாலன்றி சாப்பிடமாட்டார்கள். சந்தைகூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை. அது தவிர குவளைகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக பாரம்பரிய முறைகளையும் கைக்கொண்டார்கள்.

மாற்கு 7:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள். ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்; கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.

மாற்கு 7:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.

மாற்கு 7:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.