மாற்கு 7:1-13
மாற்கு 7:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு நாள் பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலரும் எருசலேமிலிருந்து ஒன்றாய் வந்து, இயேசுவைச் சுற்றி நின்றார்கள். இயேசுவின் சீடர்களில் சிலர் முறைப்படி கை கழுவாமல், அசுத்தமான கைகளினால் உணவு சாப்பிடுவதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், யூதர் எல்லோரும் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி, கைகளைக் கழுவினாலன்றி சாப்பிடமாட்டார்கள். சந்தைகூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை. அது தவிர குவளைகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக பாரம்பரிய முறைகளையும் கைக்கொண்டார்கள். எனவே பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி நடந்து கொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் ‘அசுத்தமான’ கைகளினால் உணவு சாப்பிடுகிறார்களே” என்றார்கள். அதற்கு இயேசு பதிலாக, “வேஷக்காரராகிய உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்; அவர் எழுதியிருக்கிறதாவது: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது. அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே.’ நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, மனிதரின் பாரம்பரிய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக, இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள். ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தனது தகப்பனையோ தாயையோ சபித்தால் அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள். அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்விதமாய், நீங்கள் கைக்கொண்டுவரும் பாரம்பரிய முறையினால், இறைவனுடைய வார்த்தையை செல்லாததாக்குகிறீர்கள். அத்துடன், நீங்கள் இவ்விதமான பல காரியங்களையும் செய்கிறீர்கள்” என்றார்.
மாற்கு 7:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள். ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்; கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள். அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும், மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது. எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்; நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
மாற்கு 7:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர். பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது: “‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது. அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’ நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார். மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’ என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’ என்று கூறி இருக்கிறான். ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.
மாற்கு 7:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேகக் காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.