மாற்கு 6:53-56

மாற்கு 6:53-56 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள். அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, அந்தச் சுற்றுபுறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

மாற்கு 6:53-56 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரையைப் பிடித்தார்கள். அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே, அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள். அந்தப் பகுதி எங்கும் அவர்கள் ஓடிப்போய், நோயாளிகளைப் படுக்கையின்மேல் கிடத்தி சுமந்துகொண்டு, இயேசு எங்கிருப்பதாகக் கேள்விப்பட்டார்களோ, அங்கெல்லாம் கொண்டுவந்தார்கள். கிராமங்களிலும், பட்டணங்களிலும், ஊர்களிலும் இயேசு எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் இருந்த சந்தைகூடும் இடங்களில் நோயாளிகளைக் கிடத்தினார்கள். அந்த நோயாளிகள் அவருடைய ஆடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அனுமதிக்கும்படி, அவர்கள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.

மாற்கு 6:53-56 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள். அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்; இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.

மாற்கு 6:53-56 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்தனர். அவர்கள் கெனெசரேத்தின் கரைக்கு வந்தனர். அங்கே படகைக் கட்டி வைத்தனர். அவர்கள் படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர். அம்மக்கள் ஓடிப்போய் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை அறிவித்தார்கள். இயேசு போகிற எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப் படுக்கையோடு எடுத்து வந்தனர். அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும் இயேசு சென்றார். இயேசு எங்கே சென்றாலும் அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம் எடுத்து வந்தனர். அவர்கள் இயேசுவிடம் அவரது ஆடை நுனியையாவது தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அவரைத் தொட்டவர்கள் எல்லோரும் குணமடைந்தனர்.