மாற்கு 6:35-44

மாற்கு 6:35-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவ்வாறு வெகுநேரம் கடந்துவிட்டது. எனவே அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம், நேரமுமாகிவிட்டது. ஆகவே இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். சீடர்கள் அவரிடம், “இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம் தேவையாகும்! நாங்கள் போய் அவ்வளவு பணத்தைச் செலவுசெய்து, உணவு வாங்கிக் கொடுக்கவேண்டுமோ?” என்றார்கள். இயேசு அவர்களிடம், “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன என்று போய்ப் பாருங்கள்” என்றார். சீடர்கள் விசாரித்துப் பார்த்து, “ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்றார்கள். அப்பொழுது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார். அப்படியே அவர்கள் நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள். இயேசு அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணார்ந்துப் பார்த்து, நன்றி செலுத்தி அப்பங்களைப் பிட்டார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் சீடர்கள் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாய் இருந்தது.

மாற்கு 6:35-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது; சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள். அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.

மாற்கு 6:35-44 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர். ஆனால் இயேசுவோ, “அவர்களுக்கு உண்ண நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்றார். சீஷர்களோ இயேசுவிடம், “இவர்கள் அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால் அப்பத்தை வாங்கத் தேவையான பணத்துக்கு நாம் அனைவரும் ஒரு மாதக் காலத்துக்கு உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்றனர். இயேசு, தன் சீஷர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்” என்றார். சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை எண்ணிப் பார்த்துவிட்டு இயேசுவிடம் வந்து, “நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன”, என்றார்கள். பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு, சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.

மாற்கு 6:35-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; புசிக்கிறதற்கும் இவர்களிடத்திலே ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்