மாற்கு 6:14-56

மாற்கு 6:14-56 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவின் பெயர் எங்கும் பரவியிருந்தபடியால், ஏரோது அரசனும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டான். சிலரோ, “யோவான் ஸ்நானகன் உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டான். அதனாலேயே இவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகின்றன” என்றார்கள். மற்றவர்களோ, “இவன் எலியா” என்றார்கள். இன்னும் சிலரோ, “இவன் முற்காலத்தில் இருந்த இறைவாக்கினரைப் போன்ற ஒரு இறைவாக்கினன்” என்றார்கள். ஆனால் ஏரோது இதைக் கேள்விப்பட்டபோது, “நான் சிரச்சேதம் செய்த யோவானே இறந்தோரிலிருந்து எழுந்திருக்கிறான்!” என்றான். ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைதுசெய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தம் அவன் இதைச் செய்திருந்தான். யோவான் ஏரோதுவிடம், “உன் சகோதரனின் மனைவியை நீ வைத்திருப்பது மோசேயின் சட்டத்திற்கு மாறானது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு, யோவானைக் கொலைசெய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்பதை ஏரோது அறிந்து பயமடைந்ததினால், அவனைப் பாதுகாத்தான். யோவான் சொன்னதை ஏரோது கேட்டு மிகவும் குழப்பமடைந்தான்; இருப்பினும், அவன் சொல்லுவதற்குச் செவிகொடுக்க விரும்பினான். கடைசியாக, ஏரோதியாளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏரோது தனது பிறந்த நாளிலே, தனது உயர் அதிகாரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயாவிலுள்ள முக்கியமானவர்களுக்கும் விருந்து ஒன்றைக் கொடுத்தான். ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடினாள். அவள் ஏரோதுக்கும் அவனுடைய விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன். நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாக இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அந்தச் சிறுமி வெளியே போய், தனது தாயிடம் இதைச் சொல்லி, “நான் எதைக் கேட்கவேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்றாள். உடனே அந்தச் சிறுமி அரசனிடம் ஓடி, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, கொடுங்கள்” என்று கேட்டாள். அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தான் கொடுத்த ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும் அதை அவளுக்கு அவன் மறுக்க விரும்பவில்லை. எனவே அரசன் உடனே, யோவானின் தலையைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டு ஒரு காவற்காரனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டினான். அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தான். அவன் அதை அந்தச் சிறுமிக்குக் கொடுக்க, அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதை யோவானின் சீடர்கள் கேள்விப்பட்டு, வந்து அவனது உடலை எடுத்து கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தார்கள். அப்போஸ்தலர்கள் இயேசுவினிடம் திரும்பிவந்து, தாங்கள் செய்தவற்றையும், போதித்தவற்றையும் அறிவித்தார்கள். அங்கே அநேகர் வருவதும் போவதுமாய் இருந்தபடியால், அவர்களுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லாதிருந்தது. எனவே இயேசு அவர்களிடம், “நாம் போய் அமைதியான இடத்தில் இளைப்பாறுவோம்” என்றார். எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி, தனிமையான ஒரு இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதைக் கண்ட அநேகர் அவர்களுக்கு முன்பதாகவே, அவ்விடத்திற்கு ஓடிச்சென்றார்கள். அவர்கள் எல்லாப் பட்டணங்களிலிருந்தும் புறப்பட்டு வந்திருந்தவர்கள். இயேசு கரையில் இறங்கியவுடன் மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில், அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் இருந்தார்கள். எனவே அவர் அநேக காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். இவ்வாறு வெகுநேரம் கடந்துவிட்டது. எனவே அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம், நேரமுமாகிவிட்டது. ஆகவே இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். சீடர்கள் அவரிடம், “இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம் தேவையாகும்! நாங்கள் போய் அவ்வளவு பணத்தைச் செலவுசெய்து, உணவு வாங்கிக் கொடுக்கவேண்டுமோ?” என்றார்கள். இயேசு அவர்களிடம், “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன என்று போய்ப் பாருங்கள்” என்றார். சீடர்கள் விசாரித்துப் பார்த்து, “ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்றார்கள். அப்பொழுது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார். அப்படியே அவர்கள் நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள். இயேசு அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணார்ந்துப் பார்த்து, நன்றி செலுத்தி அப்பங்களைப் பிட்டார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் சீடர்கள் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாய் இருந்தது. பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு போகும்படிச் செய்தார். இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டப் பின்பு, மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, சீடர்கள் ஏறிச்சென்ற படகு நடுக்கடலில் போய்க்கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார். எதிர்காற்று வீசியபடியால், சீடர்கள் படகைக் கட்டுப்படுத்தக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை இயேசு கண்டார்; அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் அவர்களைக் கடந்துபோகும்போது, இயேசு கடலின்மேல் நடப்பதை அவர்கள் கண்டு, அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள். ஏனெனில் அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். உடனே இயேசு அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான். பயப்படாதிருங்கள்” என்றார். பின்பு இயேசு, அவர்களுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டார். அப்பொழுது காற்று அமர்ந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். ஏனெனில் அப்பங்களைப் பிட்டு அநேகருக்கு அவர் கொடுத்ததைக் கண்டும், அவர்கள் அதன் கருத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய இருதயங்கள் உணர்வற்று கடினமாயிருந்தன. அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரையைப் பிடித்தார்கள். அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே, அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள். அந்தப் பகுதி எங்கும் அவர்கள் ஓடிப்போய், நோயாளிகளைப் படுக்கையின்மேல் கிடத்தி சுமந்துகொண்டு, இயேசு எங்கிருப்பதாகக் கேள்விப்பட்டார்களோ, அங்கெல்லாம் கொண்டுவந்தார்கள். கிராமங்களிலும், பட்டணங்களிலும், ஊர்களிலும் இயேசு எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் இருந்த சந்தைகூடும் இடங்களில் நோயாளிகளைக் கிடத்தினார்கள். அந்த நோயாளிகள் அவருடைய ஆடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அனுமதிக்கும்படி, அவர்கள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.

மாற்கு 6:14-56 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான். சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள். ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது, யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது, ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்; உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது. அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள். அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள். இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது; சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள். அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள். அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார். அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார். அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார். அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள். அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி. அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள். அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள். அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்; இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.

மாற்கு 6:14-56 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர். இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர். இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான். ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது. பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். ஏரோதியாளின் குமாரத்தி அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர். ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான். அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள். உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள். ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர். இயேசுவால் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட அவரது சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடித் தாம் அனைவரும் செய்தவற்றையும் கற்பித்தவற்றையும் அவரிடம் சொன்னார்கள். இயேசுவும், அவரது சீஷர்களும் மக்கள் நெருக்கடி மிக்க இடத்தில் இருந்தனர். அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர். இயேசுவுக்கும், அவரது சீஷர்களுக்கும் உணவு உட்கொள்ளக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் “என்னோடு வாருங்கள். நாம் அமைதியான தனி இடத்துக்குப் போவோம். அங்கு நாம் ஓய்வு எடுக்கலாம்” என்றார். எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர். ஆனால் அவர்கள் செல்வதை நிறைய மக்கள் கண்டனர். அந்த மக்களுக்கு அவர் இயேசு என்று தெரிந்தது. எனவே இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே ஓடினர். இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர். இயேசு அங்கே போய்ச் சேர்ந்ததும் தனக்காக ஏராளமான மக்கள் காத்திருப்பதை அறிந்தார். அவர் அவர்களுக்காக மனம் உருகினார். ஏனென்றால், அவர்கள் மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போன்று கவனிக்க ஆளில்லாமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு இயேசு நிறைய உபதேசம் செய்தார். அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர். ஆனால் இயேசுவோ, “அவர்களுக்கு உண்ண நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்றார். சீஷர்களோ இயேசுவிடம், “இவர்கள் அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால் அப்பத்தை வாங்கத் தேவையான பணத்துக்கு நாம் அனைவரும் ஒரு மாதக் காலத்துக்கு உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்றனர். இயேசு, தன் சீஷர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்” என்றார். சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை எண்ணிப் பார்த்துவிட்டு இயேசுவிடம் வந்து, “நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன”, என்றார்கள். பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு, சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர். பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார். அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார். அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார். கடலில் வெகு தூ ரம் படகு போய்விட்டதைக் கவனித்தார். அவரது சீஷர்கள் மிகவும் கஷ்டப்பட்டு துடுப்பு போடுவதையும் அறிந்தார். காற்றானது அவர்களுக்கு எதிராக அடித்துக் கொண்டிருந்தது. அதிகாலையில், மூன்று மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் தண்ணீரின் மேல் நடந்து நெருங்கினார். அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். இயேசுவின் சீஷர்கள் அவர் தண்ணீரின் மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் அவரை ஒரு ஆவி என்று நினைத்தனர். அவர்கள் அச்சத்தோடு கூச்சலிட்டனர். எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார். பிறகு அவர் சீஷர்கள் இருந்த படகினுள் ஏறிக்கொண்டார். காற்று அமைதியாயிற்று சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள். அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதை அறிந்துகொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை. இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்தனர். அவர்கள் கெனெசரேத்தின் கரைக்கு வந்தனர். அங்கே படகைக் கட்டி வைத்தனர். அவர்கள் படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர். அம்மக்கள் ஓடிப்போய் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை அறிவித்தார்கள். இயேசு போகிற எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப் படுக்கையோடு எடுத்து வந்தனர். அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும் இயேசு சென்றார். இயேசு எங்கே சென்றாலும் அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம் எடுத்து வந்தனர். அவர்கள் இயேசுவிடம் அவரது ஆடை நுனியையாவது தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அவரைத் தொட்டவர்கள் எல்லோரும் குணமடைந்தனர்.

மாற்கு 6:14-56 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்தசெய்கைகள் விளங்குகிறது என்றான். சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம்பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று. அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டுவந்தான். பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது, ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள், அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்; நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான். அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்கமனதில்லாமல்; உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான். அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள். அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது. அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; புசிக்கிறதற்கும் இவர்களிடத்திலே ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர்கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார். அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள். அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள். அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, அந்தச் சுற்றுபுறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்