மாற்கு 6:1-6

மாற்கு 6:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அங்கிருந்து புறப்பட்டு, தமது சொந்தப் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் சென்றார்கள். ஓய்வுநாளிலே, அவர் அவர்களுக்கு ஜெப ஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். இயேசு சொன்னதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தார்கள். அவர்கள், “இவன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவன் செய்யும் அற்புதங்கள் என்ன? இவன் தச்சன் அல்லவா? இவன் மரியாளின் மகன் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கிறார்களே” என்றார்கள். எனவே அவர்கள் அவர்மேல் கோபமடைந்தார்கள். இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது உறவினர்கள் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார். வியாதியுடையவர்கள் சிலர்மேல் தமது கைகளை வைத்து குணமாக்கினார், வேறு அற்புதங்களை அவரால் அங்கு செய்ய முடியவில்லை. அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு, அவர் வியப்படைந்தார்.

மாற்கு 6:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள். ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார். அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல். அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.

மாற்கு 6:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? இவர் ஒரு தச்சன் மட்டும்தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார். இயேசு அந்த ஊரில் அதிக அளவில் அற்புதங்களைச் செய்ய இயலவில்லை. அவர் நோயுற்ற சிலரின் மேல் தன் கையை வைத்து குணமாக்கும் சில செயல்களை மட்டுமே செய்தார். அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார்.

மாற்கு 6:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள். ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார்.