மாற்கு 5:21-34
மாற்கு 5:21-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள். அப்பொழுது யூத ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான யவீரு என பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான். எனவே இயேசு அவனுடன் சென்றார். போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அங்கே, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள். அவள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள்ளே வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள். இயேசு தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை உடனே அறிந்தார். அவர் மக்கள் கூட்டத்திற்குள்ளே திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள். ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார். அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். இயேசு அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தியது. சமாதானத்துடனே போ, உன் வேதனை நீங்கி குணமாயிரு” என்றார்.
மாற்கு 5:21-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள். அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண், அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி; மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.
மாற்கு 5:21-34 பரிசுத்த பைபிள் (TAERV)
படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். அவன் இயேசுவை மேலும், மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன குமாரத்தி செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான். ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர். அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள். அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார். இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர். ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார்.
மாற்கு 5:21-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: என் குமாரத்தி மரணஅவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.