மாற்கு 5:18-20
மாற்கு 5:18-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
மாற்கு 5:18-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான். இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார். அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.
மாற்கு 5:18-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார். அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
மாற்கு 5:18-20 பரிசுத்த பைபிள் (TAERV)
படகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல இயேசு தயாரானார். பிசாசுகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும் இயேசுவோடு வர அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டான். ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனிடம் இயேசு, “நீ வீட்டுக்குப் போ. உன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக் கர்த்தர் செய்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறு. அவர் உனக்குக் கருணை செய்தார் என்றும் கூறு” என்றார். எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.