மாற்கு 5:1-43

மாற்கு 5:1-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்து கொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டன. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: என் குமாரத்தி மரணஅவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத் தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

மாற்கு 5:1-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள். இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான். அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. பலமுறை அவனுடைய காலையும் கையையும் சங்கிலியினால் கட்டியபோதுங்கூட, அவன் சங்கிலிகளைத் தகர்த்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்துப் போடுவான். அவனை அடக்கிக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது. இரவும் பகலும் அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னைத்தானே கற்களினால் காயப்படுத்திக்கொண்டும் இருப்பான். இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான். அவன் உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்தவேண்டாம் என்று இறைவன் பெயரில் கேட்கிறேன்!” என்றான். ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார். அப்பொழுது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று அவன் பதிலளித்தான். அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான். அங்கே அருகேயிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதிகொடும்” என்று கெஞ்சிக்கேட்டன. இயேசு அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்; அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அந்தப் பன்றிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பன்றிகள் இருந்தன. அவை அந்த செங்குத்தான கரையோரத்திலிருந்து விரைந்தோடி, ஏரிக்குள் விழுந்து மூழ்கின. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள். நடந்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்தவனுக்கு நிகழ்ந்ததையும் பன்றிகளைப் பற்றியும் அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பகுதியைவிட்டுப் போய்விடும்படி வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான். இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார். அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள். இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள். அப்பொழுது யூத ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான யவீரு என பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான். எனவே இயேசு அவனுடன் சென்றார். போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அங்கே, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள். அவள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள்ளே வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள். இயேசு தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை உடனே அறிந்தார். அவர் மக்கள் கூட்டத்திற்குள்ளே திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள். ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார். அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். இயேசு அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தியது. சமாதானத்துடனே போ, உன் வேதனை நீங்கி குணமாயிரு” என்றார். இயேசு பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டிலிருந்து, சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் ஏன் போதகருக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல், ஜெப ஆலயத் தலைவனிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு” என்றார். பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறு எவரையும் தம்முடன் வர இயேசு அனுமதிக்கவில்லை. அவர்கள் ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்தபோது, மக்கள் அழுவதினாலும் சத்தமிட்டுப் புலம்புவதினாலும் ஏற்பட்ட குழப்பத்தை இயேசு கண்டார். பிறகு இயேசு உள்ளே போய் அவர்களிடம், “ஏன் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திப் புலம்புகிறீர்கள்? பிள்ளை சாகவில்லை, தூங்குகிறாள்” என்றார். அவர்களோ இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். இயேசு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டபின், அந்தப் பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தன்னுடன் இருந்த சீடரையும் கூட்டிக்கொண்டு, பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார். அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்!” என்றார். அதற்கு அராமிய மொழியில், “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திரு!” என்று அர்த்தமாகும். உடனே அந்தச் சிறு பெண் எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயதுடையவளாயிருந்தாள். இதைக் கண்டவர்கள், மிகவும் வியப்படைந்தார்கள். “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.

மாற்கு 5:1-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள். அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான். அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு; இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள். அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார். அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள். அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண், அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி; மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி; வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்; ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று, பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.

மாற்கு 5:1-43 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர். படகிலிருந்து இயேசு இறங்கியதும் இறந்த மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குகைகளிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அந்த மனிதனை அசுத்த ஆவிகள் பிடித்திருந்தன. அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. பலமுறை மக்கள் அவனது கைகளையும் கால்களையும் விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டிப்போட்டிருந்தனர். ஆனால் அந்த மனிதன் அச்சங்கிலிகளையும் விலங்குகளையும் அறுத்து எறிந்துவிடுவான். அவனைக் கட்டுப்படுத்தும் பலமுள்ள மனிதன் எவனும் அங்கில்லை. இரவும், பகலும் அவன் கல்லறைக் குகைகளைச் சுற்றியும் மலைப் பகுதிகளிலும் திரிந்துகொண்டிருந்தான். அவன் கூக்குரலிட்டுக்கொண்டும், கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான். தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இந்த மனிதனை விட்டு வெளியே போ” என்று சொன்னார். உடனே அவன் உரத்த குரலில் “இயேசுவே! மகா உன்னத தேவ குமாரனே! என்னிடம் என்ன விரும்புகிறீர்? என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று தேவனிடம் ஆணையாய் உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான் பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான். அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும், மீண்டும் கெஞ்சிக் கேட்டன. அப்பொழுது அந்த மலையருகே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அசுத்த ஆவிகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டன. அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும். பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர். அவர்கள் இயேசுவிடம், வந்தார்கள். பல அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தவனையும், அவர்கள் பார்த்தார்கள். அவன் ஆடைகள் அணிந்து அமைதியாய் இயேசுவின் காலடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது மனநிலை சரியாக இருந்தது. மக்கள் இவற்றைக் கண்டு அச்சப்பட்டனர். இயேசு செய்தவற்றைப் பார்த்திருந்த சிலரும் அங்கே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடம் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவனின் செயல்களையும் இயேசு அவனைக் குணப்படுத்தியதையும் கூறினர். அவர்கள் பன்றிகளுக்கு ஏற்பட்டதையும் சொன்னார்கள். பிறகு அந்த மக்கள், இயேசுவிடம் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி வேண்டினர். படகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல இயேசு தயாரானார். பிசாசுகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும் இயேசுவோடு வர அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டான். ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனிடம் இயேசு, “நீ வீட்டுக்குப் போ. உன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக் கர்த்தர் செய்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறு. அவர் உனக்குக் கருணை செய்தார் என்றும் கூறு” என்றார். எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர். படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். அவன் இயேசுவை மேலும், மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன குமாரத்தி செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான். ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர். அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள். அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார். இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர். ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார். இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் குமாரத்தி இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர். அந்த மக்கள் சொன்னதைப்பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, “பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு” என்று கூறினார். மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது. இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார். இதைக்கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து சிரித்தார்கள். இயேசு அம்மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அவர் தன்னோடு அக்குழந்தையின் தாய், தந்தை, மூன்று சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார். அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “ தலீத்தாகூமி! ” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர். இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.