மாற்கு 4:35-41
மாற்கு 4:35-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அன்று மாலை வேளையானபோது, இயேசு தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, இயேசுவை அவர் படகில் இருந்த வண்ணமாகவே, தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது. இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப்போவதைப் பற்றி, உமக்குக் கவலையில்லையா!” எனக் கேட்டார்கள். இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று. இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார். அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், “இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?” என்று பேசிக்கொண்டார்கள்.
மாற்கு 4:35-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார். அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது. அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
மாற்கு 4:35-41 பரிசுத்த பைபிள் (TAERV)
அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன. மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர். இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது. இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார். சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.
மாற்கு 4:35-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையைவைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.