மாற்கு 4:24-41
மாற்கு 4:24-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு தொடர்ந்து: “நீங்கள் கேட்பதைக் கவனமாய் யோசியுங்கள். எந்த அளவையை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அந்த அளவையினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும். இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார். மேலும் இயேசு சொன்னார்: “இறைவனுடைய அரசு ஒருவர் விதைகளை நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாயிருக்கிறது. அவன் இரவும் பகலும் தூங்கியும் விழித்தும் இருக்கையில் அந்த விதை முளைவிட்டு வளர்கிறது; அது எப்படியென்று அவனுக்குத் தெரியாது. மண் தானாகவே தானியத்தை, முதலில் பயிரையும் பின்பு கதிரையும் அதற்குப் பின்பு கதிரிலே நிறைந்த தானியத்தையும் அது கொடுக்கிறது. பயிர் விளைந்தவுடனே, அறுவடை வந்துவிட்டதென்று விதைத்தவன் அதன்மேல் அரிவாளை போடுகிறான்” என்றார். மீண்டும் இயேசு, “இறைவனுடைய அரசை, நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விவரித்துக் கூறுவோம்? அது கடுகுவிதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கிறது. ஆகிலும் அது விதைக்கப்படும்போது முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக்கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார். மக்கள் கேட்டு விளங்கக்கூடிய அளவுக்கு, இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலம், அவர்களுக்கு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தார். உவமைகளின் மூலமே அல்லாமல், இயேசு அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது, அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவாக்கினார். அன்று மாலை வேளையானபோது, இயேசு தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, இயேசுவை அவர் படகில் இருந்த வண்ணமாகவே, தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது. இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப்போவதைப் பற்றி, உமக்குக் கவலையில்லையா!” எனக் கேட்டார்கள். இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று. இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார். அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், “இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?” என்று பேசிக்கொண்டார்கள்.
மாற்கு 4:24-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து; இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது. எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும். பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது; விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார். அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார். அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது. அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
மாற்கு 4:24-41 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் கேட்கிறவற்றைப் பற்றிக் கவனமாய் சிந்தியுங்கள். நீங்கள் எப்படிக் கொடுக்கிறீர்களோ அந்தப்படியே தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ஆனால் நீங்கள் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ஏற்கெனவே உள்ளவன் மேலும் பெற்றுக்கொள்வான். எவனிடம் மிகுதியாக இல்லையோ அவனிடமிருந்து இருக்கும் சிறு அளவும் எடுத்துக்கொள்ளப்படும்.” பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது. எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார். மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்? தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள். ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து, உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும். அதன் கிளைகள் மிகப் பெரிதாக விரியும். காட்டுப் பறவைகள் அதன் கிளைகளில் கூடுகட்டித் தங்கமுடியும். அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும்” என்றார். மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார். இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார். அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன. மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர். இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது. இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார். சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.
மாற்கு 4:24-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது; விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார். அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையைவைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.