மாற்கு 4:13-20

மாற்கு 4:13-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார். “விவசாயி வார்த்தையை விதைக்கிறான். சிலர் பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதை போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன், சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான். மற்றவர்களோ, கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள். ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விசுவாசத்திலிருந்து விழுந்து போகிறார்கள். வேறுசிலரோ, முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டும், இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. வேறுசிலரோ, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு சிலர் முப்பதும், அறுபதும், நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுக்கிறார்கள்” என்றார்.

மாற்கு 4:13-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.

மாற்கு 4:13-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே. சில நேரங்களில் அப்போதனை வழிப்பாதையில் விழும். சிலர் தேவனின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி எடுத்துச் சென்றுவிடுவான். “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். ஆனால் அவர்கள் அப்போதனைகள் அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அவற்றைக் கொஞ்ச காலமே வைத்திருப்பர். ஆனால் அந்தப் போதனையை ஏற்றதால் கஷ்டமோ, பிறர் மூலம் துன்பமோ வரும்போது அவர்கள் அவற்றை உடனே கைவிட்டு விடுவர். “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை. “மற்றவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் போதனையைக் கேட்டு, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முப்பது மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் நூறு மடங்காகவும் பலன் தருகின்றனர்” என்றார்.

மாற்கு 4:13-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்? விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.