மாற்கு 3:31-35
மாற்கு 3:31-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, இயேசுவை அழைத்துவர ஆளனுப்பினார்கள். மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். அப்போது, போனவர்கள் அவரிடம், “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைத் தேடிவந்து வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்றார். பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, “இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
மாற்கு 3:31-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி; தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.
மாற்கு 3:31-35 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான். இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மாற்கு 3:31-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி; தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.