மாற்கு 3:1-6

மாற்கு 3:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.

மாற்கு 3:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். சிலர் இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு சுருங்கிய கையுடையவனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது கொல்லுவதா?” என்று கேட்டார். அவர்களோ, ஒன்றும் பேசாமல் இருந்தார்கள். அவர்களுடைய பிடிவாத இருதயத்தின் நிமித்தம் வருந்தி, சுற்றியிருந்த அவர்களை இயேசு கோபத்துடன் பார்த்து அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான், அது முற்றிலுமாக குணமடைந்தது. அப்பொழுது பரிசேயர்கள் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி, ஏரோதியர்களுடனே சதி செய்தார்கள்.

மாற்கு 3:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது. உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள்.

மாற்கு 3:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார். பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை. இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர்.